×

நாளை மறுநாள் ராகு-கேது பெயர்ச்சி விழா: திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளத்தில் வழிபாடு நேரடி ஒளிபரப்பு

திருச்சி: ராகு-கேது பகவான்கள் ஒரு ராசியைக் கடந்து செல்ல ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் (18 மாதங்கள்) ஆகின்றன. ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள். 12 ராசிகளில் இந்த கிரகங்களுக்கு என்று சொந்த வீடு இல்லை என்பதால் எந்த ராசியில் நிற்கிறார்களோ அந்த ராசியில் ஆட்சி செய்யும் கிரகங்களின் பலன்களை ராகு - கேது கொடுக்கும். அதன்படி ராகு - கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் 1ம் தேதி நிகழ உள்ளது. திருக்கணித பஞ்சாங்கப்படி செப்டம்பர் 23ம் தேதி நிகழ இருக்கிறது. வரும் 1ம் தேதி மதியம் 2.16மணிக்கு ராகு-கேது பெயர்ச்சியையொட்டி, 2.16மணிக்கு மிதுன ராசியில் உள்ள ராகு ரிஷபம் ராசிக்கும், தனுசு ராசியில் உள்ள கேது விருச்சிகம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர்.
ராகுபெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், கும்பம் போன்ற ராசி உள்ளவர்கள் பரிகாரம் செய்துகொள்ள வேண்டும்.

ராகு பரிகார தலமான தஞ்சை மாவட்டம் திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ராகு பெயர்ச்சி வழிபாடு சிறப்பாக நடைபெறும். இக்கோயிலில் பெரிய பிரகாரத்தின் தென் மேற்கு மூலையில் ராகு சன்னதி உள்ளது. நாகவல்லி, நாககன்னி தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கிறார். இவருக்கு உகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம். இத்தகைய சிறப்புபெற்ற திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் வரும் 1ம் தேதி ராகு பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. இதையொட்டி நாளை(30ம் தேதி) மாலை 6 மணிக்கு ராகு பகவானுக்கு முதல் கால யாக பூஜை துவங்குகிறது. 31ம் தேதி காலை 2ம் கால யாக பூஜையும், மாலை 3ம் கால பூஜையும், 1ம் தேதி காலை 10 மணிக்கு 4ம் கால பூஜையும் சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது.

அன்று காலை 10 மணி முதல் மதியம் 2.30 மணி வரை சிறப்பு ஹோமங்கள், அபிஷேக ஆராதனைகள், லட்சார்ச்சனை, தயிர் பள்ளயம், சந்தனக்காப்பு மற்றும் புஷ்ப அலங்காரம் பக்தர்களின்றி நடைபெறுகிறது. விழாவில் பூஜைகள் யூ-டியூப் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படு கிறது. மேலும் லட்சார்ச்சனை விபூதி, பிரசாதம் தபால் மூலம் அனுப்பப்படும் என கோயில் நிர்வாகம் ெதரிவித்துள்ளது. இதேபோல் கேது ஸ்தலமான நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயிலில் வரும் 1ம் தேதி கேது பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. கேது, பிறப்பில் ஒரு அசுரன். விப்ரசித்து மற்றும் சிம்கிகைக்கு மகனாகப் பிறந்து வளர்ந்துவந்தான். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது அமிர்தம் வெளிப்பட்டது. அதை மகாவிஷ்ணு மோகினியாக மாறி தேவர்களுக்குப் பரிமாறிக்கொண்டு இருந்தவேளையில், தானும் அமிர்தம் பருக வேண்டும் என்று நினைத்த அசுரனாகிய கேது, உருவத்தை மாற்றிக்கொண்டு தேவர்கள் வரிசையில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் அமர்ந்து, மஹாவிஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டுவிட்டான்.

உண்மை அறிந்த சூரியனும் சந்திரனும் மகாவிஷ்ணுவிடம் சொல்ல, மஹாவிஷ்ணு தன் கையில் இருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்க, தலை வேறு உடல் வேறாகி விழுந்தான். ஆனாலும், அமிர்தம் உண்ட மகிமையால் அவன் உடல் பகுதியில் உயிர் இருந்தது. கேதுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க, இறைவன் அவனை உடல் மற்றும் ஐந்து நாகத்தலையுடன் செந்நிறமாக கேதுவாக மாற்றி அருள் செய்தார். அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார். நவக்கிரகங்களில் ஒன்றான கேது வழிபட்ட தலங்களில் நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளமும் ஒன்று. சவுந்தரநாயகி அம்மன் சமேத நாகநாதசுவாமி அருள்பாலிக்கிறார். கேதுவுக்குப் பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், கேதுவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நன்மை அடையலாம். இத்தனை சிறப்பு வாய்ந்த கேது பரிகார ஸ்தலமான கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் சுவாமி கோயிலில் எமகண்ட காலத்தில் கேதுவுக்கு விசேஷ வழிபாடும்,

பூஜைகளும் நடைபெறும். வரும் 1ம் தேதி கேது பெயர்ச்சிவிழாவையொட்டி கேதுவுக்கு விசேஷ ஹோமம், அபிஷேகங்கள் நடக்கிறது. மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளவேண்டும். கேது பெயர்ச்சியையொட்டி நாளை மாலை 6 மணிக்கு கேது பகவானுக்கு முதல் கால பூஜை துவங்கி 1ம் காலை 10 மணி வரை 4 கால பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து மதியம் 2.30 மணி வரை விழா நடக்கிறது. பக்தர்களின் வசதிக்காக யூ டியூப்களில் பூஜைகள் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.Tags : shift ceremony ,broadcast ,Thirunageswaram ,Rahu-Ketu ,Keelapperumpallam , Rahu, Ketu Displacement Ceremony, Thirunageswaram, Keelapperumpallam
× RELATED தலாய் லாமாவின் தலைமையில் நடந்த...