×

5 மாதங்களில் 100 கோடி இழப்பு: கேரளம் ஆலப்புழாவில் தள்ளாடும் படகு வீடுகள்: கொரோனா பிடியில் சிக்கிய சுற்றுலாவின் சொர்க்கபுரி

திருவனந்தபுரம்: ‘தெய்வத்தின்றே சொந்த பூமி’ (கடவுளின் தேசம்) என அழைக்கப்படும் கேரளம், சுற்றுலா தலங்கள் மலர்ந்து கிடக்கும் இயற்கை தாயின் வரம்பெற்ற பகுதி. கோடைக்காலம், பனிக்காலம் என்றில்லாமல், ஆண்டு முழுவதுமே இங்குள்ள சுற்றுலா தலங்கள் மக்களை கவர்ந்து வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையே பசுமை போர்த்தி இயற்கை எழில் கண்களை கொள்ளை கொள்ளும் வயநாடு. பம்பா நதி, பற்பல ஓடைகள் சலசலத்து ஓடும், அடர்ந்த காடுகள் நிறைந்த சபரிமலை. நெடிதுயர்ந்த தென்னைகள் நிறைந்த, சுற்றுலா தலமான கோவளம் கடற்கரை. உப்பங்குழி கால்வாய்கள், நீர்த்தேக்கங்கள் நிறைந்து தீவுக்கூட்டங்கள் போல நிலப்பகுதிகள் சிதறிக்கிடக்கும் சர்வதேச சுற்றுலா தலம் குமரகம். நீரோடைகளுக்கு நடுவே பசுமை போர்த்திய சோலைகளுடன் மனம் மயக்கும் ஆலப்புழா. அரண்மனைகள், கோயில்கள் நிறைந்த, ‘கதக்களி’ நடனம் உருவான கொட்டாரக்கரா. அற்புத மூலிகைகள் மற்றும் தேன் சொட்டும் தேன்மலா.

காட்டுயிர் சரணாலயம் மற்றும் கலாசார அடையாளங்களுடன் தேக்கடி. கலாச்சார ரீதியில் பழம்பெருமை வாய்ந்த கொல்லம். இப்படி கேரளாவின் சுற்றுலா தலங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஆனால், சுற்றுலாவின் சொர்க்கபுரி கேரளம் இன்று கொரோனாவின் பிடியில் சிக்கி கொண்டிருக்கிறது. கேரளாவுக்கு சுற்றுலா மூலம்தான் முக்கிய வருமானம் கிடைக்கிறது. கடந்த ஆண்டில் கேரளாவுக்கு 1.96 கோடி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 17.2 சதவீதம் அதிகம். இதன் மூலம் கேரள சுற்றுலாத்துறைக்கு 45,010.69 கோடி  மொத்த வருமானம் கிடைத்துள்ளது. கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் கேரளாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சில மாதங்கள் சுற்றுலா பயணிகள் அதிகமாக கேரளாவுக்கு செல்லவில்லை. ஆனாலும் சுற்றுலாத்துறைக்கு வருமானம் குறையவில்லை. ஆனால் இந்த ஆண்டு நிலைமை தலைகீழாகி விட்டது.

கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் 5 மாதங்களுக்கு மேலாக கேரளாவில் சுற்றுலாத்துறை ஸ்தம்பித்து போயுள்ளது. அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகின்றனர். கேரளாவில் ஏராளமான சுற்றுலா தலங்கள் இருந்தாலும் ஆலப்புழா மற்றும் கோட்டயம் குமரகத்தில் உள்ள படகு இல்லம் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். காஷ்மீருக்கு அடுத்தபடியாக இங்குதான் படகு இல்ல சவாரி சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. இதனால் இந்தியாவின் பலவேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பெருமளவு சுற்றுலா பயணிகள் இங்கு குவிகின்றனர். ஆலப்புழா மற்றும் குமரகத்தில் சுமார் 1,500 படகுகள் இயங்கி வருகின்றன. ஒரு படுக்கை அறையில் தொடங்கி 10 படுக்கை அறைகள் வரை உள்ள படகுகள் உள்ளன. ஒரு படுக்கை உள்ள படகுக்கு ஒருநாளுக்கு உணவு உட்பட (வரி நீங்கலாக) ₹6,000 கட்டணமாகும்.  முதல்நாள் காலை 11:30 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 9 மணி வரை படகில் நாம் பயணிக்கலாம்.

காலையில்  குளிர்பானத்தில் தொடங்கி மதியம் நமக்கு விருப்பப்பட்ட சிக்கன், மீன், காய்கறி உட்பட கேரள பாரம்பரிய உணவும், மாலையில் டீ அல்லது காபி மற்றும் நொறுக்கு தீனியும் கிடைக்கும். இரவிலும் சுடச்சுட உணவு வழங்கப்படும். மறுநாள் காலை சிற்றுண்டியுடன் இந்த படகு சுற்றுலா முடிவடையும். நமக்கு அவ்வப்போது உணவு சமைத்துத்தர படகிலேயே சமையல்காரரும் இருப்பார். காலையில் படகு ஓடத்தொடங்கினால் மாலை 5 அல்லது 6 வரை நாம் சுற்றி கொண்டிருக்கலாம். இரவில் ஏதாவது ஒரு இடத்தில் படகை கட்டிப்போட்டு விடுவர். படகில் ஏசி, டிவி உண்டு. இரவில் படகு தேவை இல்லாதவர்கள் பகலில் மட்டும் வாடகைக்கு எடுத்து கொள்ளலாம். கட்டணம் சற்று குறைவாகும்.  இந்த படகு பயணம் சுற்றுலா பயணிகளுக்கு வித்தியாசமானதாக இருக்கும். இதனால்தான் ஆண்டு முழுவதும் இங்கு சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.

ஆனால் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக ஆலப்புழா மற்றும் குமரகம் சுற்றுலாபயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்த ஐந்தரை மாதங்களில் தங்களுக்கு 100 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக படகுகளை வைத்திருக்கும் டோமி புளிக்கல் என்பவர் கூறுகிறார். அவர் கூறியதாவது: இதுவரை எங்களது இந்த சுற்றுலா படகு தொழிலுக்கு இப்படி ஒரு பாதிப்பை நான் பார்த்ததில்லை. எனக்கு 10 படகுகள் உள்ளன. ஆண்டில் எல்லா மாதங்களிலும் குறைந்தது 20 நாட்களாவது படகுகள் ஓடிக்கொண்டிருக்கும். வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து மிக அதிக எண்ணிக்கையில் வருகின்றனர்.  சுற்றுலா படகுகள் மட்டுமல்லாமல், அலுவலக கூட்டங்கள் நடத்தும் வகையில் அரங்கங்களுடன் கூடிய படகுகளும் உள்ளன.

பல நிறுவனங்கள் வித்தியாசமாக இருக்கட்டுமே என கருதியும், ஊழியர்களுக்கு மனமகிழ்ச்சியை ஏற்படுத்தவும் முக்கிய அலுவலக கூட்டம் நடத்துவதற்காக இங்கு வருவது உண்டு. இதுபோன்ற படகுகளில் ஆடல், பாடல் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுடன்  கூட்டங்களை நடத்தும் நிறுவனங்களும் உள்ளன.  இதன் மூலமும் எங்களுக்கு நல்ல வருமானம் கிடைத்து வந்தது. ஆனால் இப்போது கடந்த ஐந்தரை மாதங்களுக்கும் மேலாக வருமானம் இன்றி தவித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : boat houses ,Alappuzha ,paradise ,tourist ,Kerala ,Kerala: Tourism paradise , Kerala, Alappuzha, Boat Houses, Corona
× RELATED கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு!