×

கொரோனா தாக்கம் எதிரொலி உடன்குடி கருப்புகட்டி, கற்கண்டுக்கு போதிய விலையில்லை: உற்பத்தியாளர்கள் திணறல்

உடன்குடி: கொரோனா தாக்கம் காரணமாக உடன்குடி கருப்புகட்டி, கற்கண்டுக்கு உரிய விலையில்லாமல் வியாபாரிகள், தயாரிப்பாளர்கள் திணறி வருகின்றனர். ஆனால் போலி கலப்பட கற்கண்டு, கருப்புகட்டி வியாபாரிகள் குதூகலமாக கூவி, கூவி விற்பனை செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தென்கோடியில் உள்ள உடன்குடி கருப்புகட்டி, வெற்றிலை, தென்னை விவசாயத்திற்கு புகழ் பெற்றதாகும். உடன்குடி பகுதியில் ஏராளமான பனைமரங்கள் இருப்பதால் இந்த பகுதி மக்கள் தங்களது பிரதான தொழிலாக பனைத்தொழிலை செய்து வருகின்றனர். குறிப்பாக உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் கருப்பட்டி, கற்கண்டு உலக அளவில் பிரசித்திப் பெற்றது. உடன்குடி மற்றும் அதனைச்சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்களும் தங்களது வாழ்வாதரமாக பனைத்தொழிலையே நம்பியே வாழ்ந்து வருகின்றனர். வறட்சிப்பகுதியான உடன்குடி வானம் பார்த்த பூமியாக இருப்பதால் அதிகளவில் பெரும்பாலும் நெல், வாழை உள்ளிட்ட விவசாயங்கள் செய்ய முடியாது. மேலும் உடன்குடி பகுதிகளில் அதிகளவில் பனைமரங்கள் நிறைந்து காணப்படுகிறது. வருடத்திற்கு 6 மாதம் மட்டுமே பனைத்தொழில் நடைபெறும்.

உடன்குடி பகுதியிலுள்ள காரத்தன்மையுள்ள மணற்பகுதியில் உள்ள பனைமரங்களில் இருந்து கிடைக்கும் பதனீர் நல்ல தித்திப்புடன் இருப்பதால் குடிப்பதற்கும் ருசியாக இருக்கும். பதனீரை நல்ல பக்குவத்துடன் இறக்கி பெரிய தாச்சி எனப்படும் பாத்திரத்தில் காய்ச்சி சரியான பக்குவத்தில் இறுதியில் கட்டியாக இருக்கும் கூப்பனியை மணலில் தேங்காய் சிரைட்டையில் (கொட்டாங்குச்சி) ஊற்றி கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கும் கருப்பட்டி, கற்கண்டு பல ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாது. மேலும் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்ட மக்களும் கருப்பு கட்டி, கற்கண்டை எந்த பயமுமின்றி சாப்பிடலாம். மார்ச் மாத கடைசியில் துவங்கி ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்திலேயே பதனீர் சீசன் முடிந்துவிடும். அதன் பின்னர் பனைமரங்களில் பதனீர் இருக்காது.

முன்பு பனைத்தொழில் செய்வதற்கு நாகர்கோவில், செங்கோட்டை, வேம்பார், கேரளம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஏராளமான பனைத்தொழிலாளர்கள் வருகை தருவர்.  பனைத்தொழிலுக்கு வருபவர்களுக்கு பல்லாயிரகணக்கான ரூபாய் முன்பணமாக கொடுத்து அழைத்து வந்து பனை ஏற வைப்பது வழக்கம். மேலும் பனைத்தொழில் செய்ய இளையதலைமுறையினர் யாரும் முன்வராத காரணத்தினால் பனைத்தொழில் அழிந்து வரும் சூழலும் உள்ளது. உடன்குடி பகுதியில் உள்ள காரத்தன்மையுள்ள மணல், மணப்பாடு கடற்கரை பகுதியில் எடுக்கப்படும் சிப்பி சுண்ணாம்பு ஆகியவற்றினால் உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் கருப்பட்டி, கற்கண்டு நல்ல சுவையாக இருப்பதால் உலகளவில் உடன்குடி கருப்புகட்டிக்கு என தனி மவுசு உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் பர்மா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் கூட, `இங்கே உடன்குடி கருப்பு கட்டி கிடைக்கும்’ என வணிக நிறுவனங்களில் எழுதி வைத்து விற்பனை செய்து வந்தனர்.

புகழ் பெற்ற கருப்பட்டியை ஒரு கிலோ சுமார் ரூ.300க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். போக்குவரத்து முடங்கியுள்ளதால் கருப்புகட்டி, கற்கண்டுகள் வெளியிடங்களுக்கு கொண்டு செல்ல முடியாமலும், வெளியிடங்களுக்கு வாங்கி அனுப்ப முடியாத சூழலும் உள்ளது. எனவே கருப்பு கட்டிகள் தேக்கம் அடைகின்றன. இதனால் நஷ்டம் ஏற்பட்டு உற்பத்தி செலவு கட்டுப்படியாகவில்லை என உற்பத்தியாளர்கள் குமுறுகின்றனர்.

கலப்பட வியாபாரிகள் குதூகலம்
உடன்குடி பகுதியில் புற்றீசல்கள்போல் கருப்புகட்டி, கற்கண்டு உற்பத்தி செய்யும் இடங்கள் பெருகி வருகின்றன. ஒரிஜினல் கருப்புகட்டி தயாரிக்கப்படும் பகுதிகளில் உள்ள கழிவுகளை வாங்கி வந்து அதில் சீனியை கலப்படம் செய்து கருப்பு கட்டி, கற்கண்டு தயாரிக்கின்றனர். இதனை பிற வெளியூர்களில் வசிக்கும் பலர் உடன்குடி கருப்புகட்டி என ஏமாந்து வாங்கி செல்லும் சூழல் உள்ளது. கருப்புகட்டி கிலோ ரூ.150 எனவும், கற்கண்டு ரூ300க்கும் வெளியூர்களில் கூவி கூவி விற்பனை செய்து வருகின்றனர். கொரோனா காலத்திலும் கலப்பட வியாபாரிகள் குதூகலமாக விற்பனை செய்து வருகின்றனர்.

Tags : Echo ,Manufacturers , Corona, coccyx, blackhead, carbuncle
× RELATED கோடை விடுமுறை எதிரொலி; பயணிகளின்...