×

சென்னையில் தொழில் அதிபர் கடத்தல் விவகாரத்தில் புதிய திருப்பம்: ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டை பிரச்சனையே கரணம் என விசாரணையில் அம்பலம்!!!

சென்னை:  சென்னையில் தொழிலதிபரை கடத்தி 2 கோடி ரூபாய் கொள்ளையடித்த விவாகரத்திற்கு செம்மரக்கட்டை பிரச்சனையே காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை மண்ணடியை சேர்ந்த தொழிலதிபர் திவான் அக்பர், தாம் கடத்தப்பட்டதாக கடந்த 17ம் தேதியன்று முத்தையால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், திவான் அக்பரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் போல் நடித்து பயங்கரவாதி தவ்பீக் கூட்டாளிகள் கடத்தியது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து இந்த கடத்தல் விவகாரத்தில் தவ்பீக் மனைவி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் நடத்திய விசாரணையில் திவான் அக்பர் மற்றும் தவ்பீக் இடையே ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான தொழில் போட்டி நீண்ட காலமாக இருப்பதும் புலப்பட்டுள்ளது. அதாவது என்.ஐ.ஏ அதிகாரிகள் போல் நடித்து திவான் அக்பரிடமிருந்து 2 கோடி ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், திவான் அக்பர் கடத்தப்பட்டதற்கு செம்மரக்கட்டை விவகாரம் காரணம் என புலப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு 3 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை திவான் அக்பரிடம் கொடுத்து விற்பனை செய்யுமாறு தரகர் மூலம் தவ்பீக் ஏற்பாடு செய்துள்ளார்.

ஆனால் செம்மரக்கட்டைகளை விற்றுவிட்டு, பணத்தை தராமல் ஏமாற்றி விட்டார் என்று தரகர் கூறியதையடுத்தே கடத்தல் நாடகம் அரங்கேறியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும் கடத்தலுக்காக 14 சிம்கார்டுகளை வாங்கியது தொடர்பாக 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து கடத்தலில் தொடர்புடைய தவ்பீக்கை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags : investigation ,Chennai , business tycoon , case , Chennai , Rs 3 crore worth , exposed ,investigation,cause !!!
× RELATED கர்நாடக பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய தீவிரம்!