×

நெல், கரும்பு, தென்னையைப் போல வெற்றிலைக்கு காப்பீடு வழங்க வேண்டும்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை

பெரியகுளம்: தேனி மாவட்டத்தில் வடுகபட்டி, சில்வார்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் 400க்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர். 5 ஆண்டுகளுக்கு தொடர் வருவாய் கிடைப் பதால், இந்த விவசாயத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இங்கு விளையும் வெற்றிலை சென்னை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களுக்கும் மற்றும் கேரளா, ஆந்திராவுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர். இந்நிலையில், கொரோ னா ஊரடங்கால் கடந்த 5 மாதமாக வெற்றிலையை பறிக்காமல் கொடியிலேயே விட்டுள்ளனர். ஒரு ஏக்கருக்கு ரூ.4 முதல் 5 லட்சம் வரை செலவு செய்து, தற்போது வெற்றிலையை பறிக்காமல் விட்டுள்ளனர்.வெற்றிலை கொடிகள் அனைத்தும் மடிந்து, அடுத்த மகசூல் எடுக்க முடியாத நிலையில் உள்ளது. கொரோனா ஊரடங்கால் வெற்றிலை விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

வெற்றிலை விவசாயத்தால் பாதிக்கப்பட்டு திருப்பூர், கோவைக்கு பிழைப்பு தேடிச் சென்ற விவசாயிகள், கொரோனா பொது முடக்கத்தால் மீண்டும் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். எனவே நெல், கரும்பு, தென்னை உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு வழங்குவது போல் வெற்றிலை பயிருக்கு காப்பீடு வழங்கியும், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வெற்றிலை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Betel, insured ,paddy, sugarcane ,coconut
× RELATED யானை தாக்கி விவசாயி பலி