×

இன்ஜின் பழுதாகி தண்ணீர் புகுந்தது விசைப்படகு கடலில் மூழ்கியது: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மீனவர்கள்

புதுச்சேரி: புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் பரசுராமன் என்ற கோவிந்தன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் 8 மீனவர்கள் தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் கடலுக்கு புறப்பட்டனர். நடுக்கடலில் கடலூர் அருகே நேற்று மதியம் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென படகில் ஓட்டை ஏற்பட்டு அதன் வழியாக தண்ணீர் புகுந்தது. வழக்கமாக 4, 5 நாட்கள் கடலில் தங்கியிருந்து மீன் பிடித்து திரும்புவார்கள்.

ஆனால் ஓட்டை ஏற்பட்டதால் உடனடியாக புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகத்துக்கு படகை திருப்பி ஓட்டி வந்தனர். படகில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மீன்களும் இருந்தன.
நல்லவாடு அருகே மதியம் ஒரு மணியளவில் வந்தபோது இன்ஜினும் பழுதானது. இதனால் தண்ணீர் படகினுள் வேகமாக நிரம்பியது. படகில் இருந்த 8 மீனவர்களும் உயிர் தப்பிக்க கடலில் குதித்து நீச்சல் அடித்தனர். இதற்கிடையே தகவல் அறிந்த சக மீனவர்கள் 2 பைபர் படகுகளில் வந்து பழுதான விசைப்படகை கயிறு கட்டி வீராம்பட்டினம் சுடுகாடு அருகே கரைக்கு இழுத்து வந்தனர். இருப்பினும், விசைப்படகு முழுவதும் கடலில் மூழ்கி சேதமானது. சேத மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும்.Tags : fishermen ,sea , Engine , boat sank , sea,surviving, fishermen
× RELATED படகு பழுதால் சிக்கி மியான்மரில்...