×

தமிழகம் முழுவதும் கிராம கோயில்களில் நடந்தேறும் ஆயிரக்கணக்கான திருமணங்கள்: இன்று ஆவணி வளர்பிறை முகூர்த்தத்தால் களை கட்டியது

சேலம்: கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் ஆடம்பர திருமணங்கள் நடத்தக்கூடாது என்றும், அதிகளவில் சொந்த, பந்தங்களை கூட்டம் சேர்க்கக்கூடாது என்றும் அரசு எச்சரித்துள்ளது. மேலும் திருமணங்கள் நடத்துவோர் கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம், கிருமிநாசினி அவ்வப்போது தெளிக்க வேண்டும். திருமணத்திற்கு வருபவர்களுக்கு சானிடைசர் வழங்கவேண்டும். கைகளை கழுவ தண்ணீர், ஹேண்ட் வாஷ் உள்ளிட்டவைகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவில் உள்ளது.இந்நிலையில் கொரோனா தொற்று பரவிய மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் திருமணங்கள் சொற்ப அளவிலேயே நடந்தது. தற்போது பொதுமக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொண்டதால், ஏராளமான ஜோடிகளுக்கு திருமணம் நடந்து வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆவணி மாதத்தில் எட்டுக்கும் மேற்பட்ட முகூர்த்தங்கள் வருகிறது. இதில் தேய் பிறை, வளர்பிறை முகூர்த்தமே அதிகம். இதன் காரணமாக கடந்த வாரம், தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடந்தது. திருமண மண்டபங்களுக்கு அனுமதி இல்லாததால் பெரும்பாலான திருமணங்கள் கிராம கோயில்களில் வைத்தே நடந்தன. ஒரு சில திருமணங்கள் வீட்டில் நடத்தப்பட்டுள்ளன. வரவேற்பு நிகழ்ச்சிகள் மட்டும் எளிமையாக மண்டபங்களில் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் நடப்பு ஆவணி மாதத்தில் இன்று (30ம் தேதி) வளர்பிறை முகூர்த்தமாகும். அதேநேரத்தில் விடுமுறை நாள் என்பதால் ஏராளமானோர் திருமணம் செய்ய முடிவு செய்து ஏற்கனவே நிச்சயித்துள்ளனர். இதற்காக நகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சிறிய கோயில்களில் முன்பதிவு செய்துள்ளனர். இந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஜோடிகளுக்கு கோயில்களில் திருமணம் நடக்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து சேலத்தை சேர்ந்த சமையல் செய்வோர் கூறியதாவது: கொரோனாவுக்கு முன்பு திருமணம் என்றால் சமையல் செய்வோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இது மட்டுமில்லாமல் காய்கறி, மளிகை வியாபாரம், திருமண மண்டபங்களில் வாழைமரம் கட்டுவோர், ஜோடனை அலங்காரம் செய்வோர், லைட் கட்டுவோர், சப்ளை செய்வோர் என நூற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கொரோனாவுக்கு பின்பு ஆடம்பர திருமணங்கள் எதுவும் இல்லை. இதனால் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சமையல் செய்வோர், சப்ளை மற்றும் திருமணங்கள் சம்பந்தப்பட்ட இதர வேலைவாய்ப்புகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. திருமண மண்டபங்களுக்கு கடந்த ஐந்து மாதமாக வருவாய் இல்லை. தற்ேபாது சிறிய கோயில்கள் மற்றும் வீடுகளிலேயே திருமணங்கள் நடக்கிறது.இதன் காரணமாக பலர் வீடுகளிலயே உற்றார், உறவினர்கள் ஒன்று சேர்ந்து சமையல் செய்கின்றனர். இதனால் சமையல் பணியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஐந்து மாதமாக வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

75 சதவீத வியாபாரம் பாதிப்பு
முகூர்த்த நாள் என்றால் காய்கறி, மளிகைக்கடை, பூக்கடைகளில் வழக்கமாக நடக்கும் வியாபாரத்தில் இருந்து ஒரு மடங்கு வியாபாரம் அதிகரிக்கும். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஆடம்பர திருமணங்கள் இல்லை. ஆயிரம் பேருடன் நடக்க வேண்டிய திருமணங்களில், தற்போது 50 முதல் 100 பேர் வைத்துதான் திருமணங்கள் நடக்கிறது. இதன் காரணமாக முகூர்த்த நாளில் நடக்க வேண்டிய காய்கறி, மளிகை, பூ வியாபாரம் பாதித்துள்ளது. முகூர்த்த நாளில் வெறும் பத்து சதவீத வியாபாரம் தான் நடக்கிறது. இதனால் காய்கறி, மளிகை தொழில் சார்ந்த வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வரவேற்பில் சானிடைசர்
கொரோனாவுக்கு முன்பு திருமணத்திற்கு வருவோரை மாப்பிளை வீட்டார், பெண் வீட்டார் வாயிலில் நின்று வரவேற்பார்கள். அப்ேபாது திருமணத்திற்கு வருவோர் மீது பன்னீர் தெளிக்கப்படும். மேலும் ஒரு தட்டில் தேங்காய், வாழைப்பழம், ஆப்பிள், சாத்துக்குடி மற்றும் சந்தனகிண்ணத்தில் சந்தனம் இருக்கும். பன்னீர் தெளித்த பின்னர், சந்தனத்தை கையால் தொட்டு, பின்னர் மண்டபத்திற்கு உள்ளே செல்வார்கள். இவைகள் தான் காலம், காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, தற்போது நடக்கும் திருமணகளில் பன்னீர், சந்தனத்திற்கு பதில் வரவேற்பு இடத்தில் சானிடைசர் வைக்கப்படுகிறது. திருமணத்திற்கு வருவோரின் கையில் சானிடைசர் கொடுத்து உள்ளே அனுப்பப்பட்டு வருகிறது.



Tags : weddings ,village temples ,Avani ,waxing crowd ,Tamil Nadu , village ,temples,weddings, weeded ,waxing
× RELATED சிம்ம ராசி குழந்தையும் தெய்வமும்