பேரணாம்பட்டு அருகே திருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் அடித்துக்கொலை: கணவன் கைது

பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே குடும்ப தகராறு காரணமாக, திருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, அவரது கணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ்(22), கட்டிட தொழிலாளி. இவரது தாய் மாமா மகள் சுப்புலட்சுமி(19). இவர்கள் இருவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் ஏற்பாட்டின்பேரில் திருமணம் நடந்தது.

இந்நிலையில், யுவராஜூக்கு குடிப்பழக்கம் இருந்ததால் திருமணம் ஆனதில் இருந்தே கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அவர்களை, பெற்றோர் சமரசம் செய்து வைத்து வந்தார்களாம். நேற்று முன்தினம் யுவராஜ் வேலைக்கு சென்றுவிட்டு, மாலையில் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தாராம். இதனை சுப்புலட்சுமி தட்டிக்கேட்டதில் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அதில் ஆத்திரமடைந்த யுவராஜ், அருகில் இருந்த இரும்பு ஊதுகுழலை எடுத்து சுப்புலட்சுமியின் தலை, நெற்றியில் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம், பக்கத்தினர் உடனடியாக மீட்டு, பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்புலட்சுமி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து சுப்புலட்சுமியின் தந்தை ராமமூர்த்தி, பேரணாம்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிந்து, யுவராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், இறந்த சுப்புலட்சுமிக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் இதுதொடர்பாக ஆர்டிஓ பார்த்தீபன் விசாரணை நடத்த உள்ளார்.

Related Stories:

>