×

திருவண்ணாமலை கிரிவல மலையில் இருந்து உணவு தேடி வெளியேறும் மான்கள் வேட்டையாடப்படும் பரிதாபம்: வனத்துறை நடவடிக்கை எடுக்குமா?

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவல மலையில் இருந்து உணவு தேடி மான்கள் வெளியேறுவதால், அவற்றுக்கு ஆபத்து விளையும் நிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை கிரிவல மலையில் ஆயிரக்கணக்கான மான்கள் உள்ளன. மலையில் உள்ள தாவர உணவுகள் மற்றும் அங்குள்ள சுனைகள் குட்டைகளில் உள்ள தண்ணீரை சார்ந்து இந்த மான்கள் வாழ்கின்றன.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மலையில் இருந்து வெளியேறி விளை நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் மான்கள் நுழைவது அதிகரித்துள்ளது. அதேேபால், செங்கம் இணைப்பு சாலை உள்ளிட்ட கிரிவலப் பாதையின் ஒருசில இடங்களில் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை மான்களுக்காக ஒருசிலர் வைத்துவிட்டு செல்கின்றனர்.

அதன் ருசி அறியும் மான்கள் அதற்காக குறிப்பிட்ட பகுதிகளுக்கு தினமும் வருகின்றன. ஆனால், மீண்டும் மலைக்குள் செல்லாமல் சாலைகளை கடந்தும், குடியிருப்பு பகுதிகளுக்கும் செல்கின்றன. அதனால், மான்கள் வேட்டையாடப்படுவதும், சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களில் சிக்கியும், நாய்களிடம் சிக்கியும் பலியாகும் பரிதாபம் நிகழ்கின்றன.கிரிவலப்பாதையில் மான்கள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு உணவு வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது என பல இடங்களில் வனத்துறையினர் அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளனர். ஆனாலும், வன விலங்குகள் மீதுள்ள ஆர்வம் காரணமாக, ஒருசிலர் உணவுகளை வைத்துவிட்டு செல்வது, விலங்குகளுக்கு ஆபத்தாக முடியும் நிலை ஏற்படுகிறது.

மேலும், மலையில் உள்ள ஒருசில குட்டைகள், ஊற்றுகளில் தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனாலும், மலையில் இருந்து மான்கள் வெளியேறுகின்றன. எனவே, மலையில் இருந்து மான்கள் வெளியேறுவதை தடுக்கவும், அவை வேட்டையாடப்படாமல் தடுக்கவும் வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.



Tags : Thiruvannamalai ,forest department ,hill ,Kiriwala ,Thiruvannamalai Kiriwala , pity ,deer,Thiruvannamalai, Kiriwala ,action?
× RELATED பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்த...