×

சென்னை புழல், வேலூர், திருச்சி உள்ளிட்ட மத்திய சிறைகளில் நன்னடத்தை கைதிகள் தயாரித்த 6 லட்சம் முகக்கவசங்கள் தேக்கம்

* மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்பு இல்லை
* தயாரிப்பு பணிகளும் பாதியில் நிறுத்தம்

வேலூர்: தமிழகத்தில் சென்னை புழல், வேலூர், திருச்சி உள்ளிட்ட மத்திய சிறைகளில் நன்னடத்தை கைதிகள் தயாரித்த 6 லட்சம் முகக்கவசங்கள் தேக்கமடைந்துள்ளது. இதற்கு அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்பு இல்லாததும் காரணம். எனவே முகக்கவசங்கள் தயாரிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. உலகளவில் 2.44 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1.60 லட்சம் பேர் குணமாகியுள்ளனர். 8.32 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் 4.09 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7ஆயிரத்து 50 பேர் பலியாகியுள்ளனர். இப்படி கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. இதனால் நாடுமுழுவதும் கிருமி நாசினிகள், முகக்கவசங்கள் தேவை அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழகத்திலும் கிருமிநாசினி, முகக்கவசங்கள் தேவை அதிகரித்துள்ளது. இதனால் மெடிக்கல் ஷாப்களில் முகக்கவசம், கிருமி நாசினி வாங்க மக்கள் அதிகளவில் கூடுகின்றனர். இதனால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறி, சில கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் உள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் நன்னடத்தை கைதிகளை கொண்டு முகக்கவசம் தயாரிக்க சிறை நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி வேலூர், புழல், கோவை, திருச்சி ஆகிய மத்திய சிறைகளில் முகக்கவசம் தயாரிக்கப்பட்டது.ஒவ்வொரு மத்திய சிறைகளில் நாள்தோறும் ஆயிரம் முதல் 3 ஆயிரம் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்திடம் விற்பனை செய்வதற்கும், தனியார் அமைப்பினரிடம் மொத்தமாக விற்பனை செய்ய முடிவு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் கைதிகள் தயாரித்த முகக்கவசங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்பு இல்லாதது தான் காரணம் என்ற குற்றச்சாட்டுகளும் கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக தற்போது ஒவ்வொரு மத்திய சிறையிலும் சுமார் 80 ஆயிரம் முதல் 2 லட்சம் முகக்கவசங்கள் வரை விற்பனையாகாமல் தேங்கியுள்ளது.

நன்னடத்தை கைதிகள் உழைப்பு வீணாச்சு
இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ‘தமிழகத்தில் முகக்கவசம், கிருமி நாசினி தேவை அதிகரித்த போது சிறையில் உள்ள நன்னடத்தை கைதிகளை கொண்டு முகக்கவசம் தயாரிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் நாள்தோறும் நூற்றுக்கணக்கில் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டது. இந்த முகக்கவசங்கள் சிறையில் பணியாற்றும் காவலர்கள், கைதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள முகக்கவசங்கள் விற்பனை செய்ய முடியாமல் தேங்கியுள்ளது.
தமிழக சிறைகளில் இதுவரை சுமார் 6 லட்சம் முகக்கவசங்கள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளது. சிறை பஜாரில் நாள்தோறும் சொற்ப அளவிலான முகக்கவசங்களே விற்பனை ஆகிறது. தற்போது தயாரித்துள்ள முகக்கவசங்களை என்ன செய்வதென்று தெரியவில்லை. நன்னடத்தை கைதிகளின் உழைப்பு வீணாகிப்போச்சு. இதனால் முகக்கவசங்கள் தயாரிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தனியார் கொள்முதல் நிறுத்த வேண்டும்
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் முகக்கவசம் வழங்கப்படுகிறது. இதுபோன்ற பயன்பாட்டிற்கு அரசுத்துறைகளுள் ஒன்றான சிறைத்துறை மூலம் நன்னடத்தை கைதிகளை கொண்டு தயாரித்த முகக்கவசங்களை கொள்முதல் செய்ய வேண்டும். தனியார் கொள்முதலை நிறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : jails ,probation inmates ,Trichy ,Vellore ,Chennai Puhal , 6 lakh ,face,including ,Chennai Puhal, Vellore,
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு புழல் சிறையில் 39 கைதிகள் எழுதினர்