×

ஊரடங்கு தடையால் வாகன வசதி இல்லாததால் ஓணம் திருநாள் பூக்கள் விற்பனை மந்தம்: கைகொடுத்தது முகூர்த்த நாட்கள்

நெல்லை:  ஊரடங்கு தடை காரணமாக போக்குவரத்து வசதியில்லாததால், நெல்லை மார்க்கெட்டில் ஓணம் திருநாள் பூக்கள் விற்பனை மந்தமாக இருந்தது. இருப்பினும் அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வருவதால் விற்பனை கைகொடுத்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். நெல்லை மாவட்டத்தில் மானூர், அழகியபாண்டியபுரம், சீவலப்பேரி, மூலைக்கரைப்படி, முனைஞ்சிப்பட்டி, பத்தமடை, கோபாலசமுத்திரம், தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வந்தி, சாமந்தி, அரளி, பிச்சி, மல்லிகை, கோழி கொண்டை உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. செடிகளில் பூத்துக்குலுங்கும் பூக்களை பறித்து நெல்லை சந்திப்பில் உள்ள பூ மொத்த மார்க்கெட்டுக்கு இருசக்கர வாகனம் அல்லது வாடகை சரக்கு வாகனத்தில் விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வருவது வழக்கம். கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து கோயில் திருவிழாக்கள், சுபநிகழ்ச்சிகள் நடத்தப்படாததாலும், வாகன போக்குவரத்து இல்லாததாலும் பூக்கள் செடிகளிலேயே பறிக்கப்படாமல் விடப்பட்டன. கடந்த ஊரடங்கு நீட்டிப்பின்போது அறிவிக்கப்பட்ட தளர்வுகளால், மார்க்கெட்டுக்கு ஓரளவு பூக்கள் வரத்து உள்ளது. ஆனாலும் டீசல் விலையேற்றத்தால், கூடுதல் வாடகை செலவாவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கடவுளின் பூமி என வர்ணிக்கப்படும் கேரள மாநிலத்தில் ஓணம் திருநாள், நாளை (31ம் தேதி)  கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே கேரள மக்கள் தங்கள் வீடுகளில் பல்வேறு பூக்களை கொண்டு அத்தப்பூ கோலமிட்டு திருநாளை வரவேற்பர். இதற்காக நெல்லை, ெதன்காசி மாவட்டங்களில் இருந்து பூக்களை வாங்கி கேரளாவிற்கு வியாபாரிகள் கொண்டு செல்வது வழக்கம். இந்தாண்டு ஓணத்தையொட்டி நெல்லை சந்திப்பு பூ மொத்த விற்பனை மார்க்கெட்டில் பல்ேவறு மலர்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. இதில் மல்லிகை கிலோ ரூ.800க்கும், பிச்சி ரூ.700, ரோஜா ரூ.250, சம்பங்கி ரூ.500, செவ்வந்தி ரூ.300, அரளி ரூ.100க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா பீதி, பொது போக்குவரத்து முடக்கம், சரக்கு வாகனங்களுக்கு இ-பாஸ் பிரச்னை, கூடுதல் வாடகை உள்ளிட்ட காரணங்களால் வியாபாரிகள் வராததால் வழக்கமான ஓணம் விற்பனை இல்லை. இருப்பினும் இன்றும் (30ம் தேதி), நாளையும் முகூர்த்த நாட்கள் என்பதால் பூக்கள் விற்பனை ஏறுமுகமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பூக்கடை செல்வக்குமார் கூறுகையில், கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு காரணமாக பூக்கடைகள் கடந்த 4 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்தது. தற்போது கடைகள் திறந்து பூக்கள் ஏலம், விற்பனை நடைபெற்று வருகிறது. திருமணம், கோயில் கொடை விழா உள்ளிட்ட விசேஷங்கள் பெரியளவில் நடத்தாத காரணத்தால் விற்பனையில் சரிவு காணப்பட்டது. இந்த ஆண்டு ஓணம் பண்டிகை பூக்கள் விற்பனையும் இல்லை. ஆனாலும் அடுத்தடுத்த முகூர்த்த நாட்களால் பூக்கள் விற்பனை சற்று ஏற்றம் கண்டுள்ளது. பூக்களின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது, என்றார்.

Tags : Thirunal ,vehicle facilities , lack ,vehicle , curfew, Onam, Thirunal,
× RELATED மலர்ந்திருக்கும் இந்தச் சித்திரை,...