×

பயன்பாடில்லாத உபரி நிலங்களில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் ரயில்வே அமைச்சகம் முடிவு: மதுரை கோட்ட அதிகாரி தகவல்

மதுரை: ரயில்வே துறைக்கு சொந்தமான பயன்பாடில்லாத உபரி நிலங்களில் சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்திய ரயில்வேக்கு தற்போது, 21 பில்லியன் அலகுகள் மின்சாரம் தேவைப்படுகிறது. வரும் 2030ம் ஆண்டில், இந்த தேவை 33 பில்லியன் அலகுகளாக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கிடையே வரும், 2023ம் ஆண்டுக்குள், இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் வழித்தடங்களும் மின்மயமாக்கப்பட உள்ளது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, ரயில்களை இயக்க அதிக மின்சாரம் தேவைப்படும்.

இந்த மின் தேவையை சரிக்கட்ட, வரும், 2030ம் ஆண்டிற்குள், ரயில்வே துறைக்கு சொந்தமான உபரி நிலங்களில், 20 ஜிகா வாட் சூரியசக்தி மின்சாரம் தயாரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.இதுதொடர்பாக, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல், சூரியசக்தி மின்சார தயாரிப்பு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். சூரியசக்தி மின்சாரம் தேவையான அளவு தயாரிக்கப்பட்டால், தெற்கு ரயில்வே உள்ளிட்ட அனைத்து கோட்டங்களிலும், ரயில்களை சூரியசக்தி மின்சாரம் மூலம் இயக்கலாம். இதனால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, ரயில் போக்குவரத்து பசுமை வழி போக்குவரத்து ஆக மாறிவிடும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Ministry of Railways ,Madurai ,surplus lands , Electricity ,solar power, Madurai, Divisional ,Officer ,
× RELATED தேவைக்கு ஏற்ப போதிய சேவை இல்லாததே...