×

தளர்வில்லா ஊரடங்கு எதிரொலி!: தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் நேற்று ஒரே நாளில் ரூ. 243 கோடிக்கு மதுபானம் விற்பனை!!!

சென்னை: முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் இன்று செயல்படாது என்பதால் நேற்று ஒரேநாளில் தமிழகம் முழுவதும் ரூ.243 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகம் முழுவதுமாக எந்தவித தளர்வும் இன்றி கடும் கட்டுப்பாட்டுடன் முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுவதே மதுபானங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதற்கு காரணமாக கூறப்படுகிறது.

 இந்தியாவில் கொரோனாவுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.  இதில் மராட்டியம் முதல் இடத்திலும், தமிழகம் 2வது இடத்திலும் உள்ளன.  நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்துவதால் பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியில் கூடுவது தவிர்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவைகள் மட்டுமின்றி அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. முழு ஊரடங்கின் போது தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காட்சியளித்தன.

 இந்நிலையில், இன்று முழு ஊரடங்கு என்பதால் நேற்று வழக்கத்தை விட மது விற்பனை அதிகமாக நடைபெற்றுள்ளது. ஊரடங்கு நாளில் தங்களுக்கு தேவையான மதுபான வகைகளை நேற்றே மதுப்பிரியர்கள் மொத்தமாக வாங்கிச் சென்றனர். நேற்று ஒரு நாள் மட்டும் 243 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இவற்றில் மற்ற மாவட்டங்களை பின்னுக்கு தள்ளி விட்டு சென்னை முதல் இடம் பிடித்து உள்ளது.  சென்னையில் ரூ. 52.50 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.  தொடர்ந்து திருச்சி ரூ.48.26 கோடிக்கும், மதுரை மண்டலம் ரூ.49.75 கோடிக்கும், சேலத்தில் ரூ.47.38 கோடிக்கும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோவையில் ரூ.45.23 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

Tags : Echo ,LockDown , Tasmac, Full lockdown, Sunday,Tasmac sales
× RELATED 3 நாட்கள் விடுமுறை எதிரொலி; டாஸ்மாக்...