×

மறைந்த வசந்தகுமார் எம்.பி. உடல் நல்லடக்கம்; இறுதிச் சடங்கில் அனைத்து கட்சியினர் பங்கேற்பு: ஏராளமானோர் திரண்டு கண்ணீர் அஞ்சலி..!!

குமரி: சென்னையில் உடல்நலக்குறைவால் காலமான வசந்தகுமார் எம்.பி.யின் உடல் அவரது சொந்த ஊரான குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே தேரிவிளையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யுமான எச்.வசந்தகுமார் கடந்த 10-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, அவரது உடலில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்தது. இதனால் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்தது. மேலும், அவர் நிமோனியா தொற்றாலும் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை அவரது உயிர் பிரிந்தது. எச்.வசந்தகுமார் உயிர் இழந்த அன்று காலை அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு இருந்தது. அந்த பரிசோதனையில் எச்.வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று இல்லை (நெகட்டிவ்) என்று முடிவு வந்தது. இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. சென்னை தி.நகர் நடேசன் தெருவில் உள்ள அவரது  இல்லத்தில் வசந்த குமார் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மேலும், எச்.வசந்தகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் அடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே, அவரது உடல் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் எடுத்து செல்லப்பட்டது. நள்ளிரவு கொண்டு  அகஸ்தீஸ்வரம் கொண்டு வரப்பட்ட வசந்தகுமார் உடலுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள வசந்தகுமாரின் பெற்றோர் கல்லறைகள் அமைந்துள்ள தோட்டத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags : Vasantha Kumar ,parties ,Many ,funeral ,Kumari , Kumari, Vasanthakumar MP , Physical well-being
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...