மலையாள மொழி பேசும் சகோதர சகோதரிகளுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து..!!

சென்னை: ஓணம் பண்டிகை கொண்டாடும் மலையாள மொழி பேசும் அனைத்து மக்களுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். எல்லா மக்களும் அனைத்து நலன்களும், வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார். சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் சாதி, மத பேதமின்றி  ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். ஓணம் இந்தியாவின் தென்தமிழகத்திலும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும்.

பருவ மழைக் காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும் ஈரமும் நிறைந்திருக்கும் கேரளாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ஓணம் கொண்டாடப்படுகிறது. கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதைக் கேரளாவின் அறுவடைத் திருநாள் என்றும் அழைப்பர். அந்நாளில் மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர்.

கேரளாவின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை ஆகஸ்ட் மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் கடந்த 22ம் தேதி முதல்  வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த ஓணம் பண்டிகை மலையாளிகளால் மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர்.  

ஓணம் பண்டிகையின் போது கேரள மக்கள் பூக்களால் கோலமிட்டு தங்களின் பாரம்பரிய உடை அணிந்து இறைவனை வழிபடுவர். கொரோனா பாதிப்பு காரணமாக  ஓணம் பண்டிகையை பொது இடங்களில் கொண்டாட கூடாது என கேரள அரசு உத்தரவிட்டுள்ளதால் இம்முறை ஓணம் பண்டிகை களையிழந்துள்ளது. இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 அதேபோல் மலையாள மக்களுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  மலையாள மொழி பேசும் சகோதர சகோதரிகளுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன். நமது வாழ்வில் அமைதி, வளம், நல்லிணக்கம், ஆரோக்கியம் போன்றவற்றை ஓணம் கொண்டு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: