×

சுகாதாரமற்ற முறையில் ஆவின் பால் பாக்கெட்: வாடிக்கையாளர் அதிர்ச்சி

சென்னை: ஆவின் பால் பாக்கெட்டில் பூச்சி போன்று கருப்பு நிறத்தில் காணப்பட்ட பொருளால் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆவின் நிறுவன பால் விற்பனைக்கு வருவதற்கு முன்பு பல்வேறு நிலைகளில் 19 வகையான பரிசோதனைகள் செய்யப்படுகிறது. மேலும் பாலின் தரம் உறுதி செய்யப்பட்ட பிறகு தான் பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த பால் பாக்கெட்கள் ஆவின் நிறுவனத்தில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள டீலர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்பிறகு அவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பால் விற்பனை நிலையம் மற்றும் மளிகை கடைகளுக்கு பால் பாக்கெட்களை வழங்குகின்றனர்.

அதன்படி 29ம் தேதியிட்டு ஆவின் நைஸ் பால் பாக்கெட்கள் கோயம்பேடு திருவீதியம்மன் கோயில் தெருவில் உள்ள மளிகை கடைகளில் விற்பனை செய்யப்பட்டது. அதில் ஒரு வாடிக்கையாளர் வாங்கிய பால் பாக்கெட்டில் பூச்சி போன்று ஒரு பொருள் கருப்பு நிறத்தில் இருப்பது தெரிந்தது. அந்த வாடிக்கையாளர் இதை கடையின் உரிமையாளரிடம் காண்பித்துள்ளார். அப்போது அவர், அந்த பால் பாக்கெட்டை வாங்கிக் கொண்டு மற்றொரு ஆவின் பால் பாக்கெட்டை கொடுத்துள்ளார். அதை வாங்க மறுத்த வாடிக்கையாளர், தனியார் நிறுவன பால் பாக்கெட்டை வாங்கி சென்றுள்ளார். சுகாதாரமற்ற முறையில் ஆவின் பால் பாக்கெட் விற்கப்பட்ட அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆவின் நிறுவனத்தின் மெத்தன போக்கே இதற்கு காரணம் என்று கடையின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Tags : Unhygienic pattern, spirit milk, pocket, customer shock
× RELATED தாம்பரம் – முடிச்சூர் பிரதான சாலையில்...