×

ஐபிஎல் தொடரிலிருந்து சுரேஷ் ரெய்னா திடீர் விலகல்: சூப்பர் கிங்சுக்கு பின்னடைவு

சென்னை: ஐபிஎல் டி20 தொடரின் நடப்பு சீசனில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் சுரஷே் ரெய்னா திடீரென விலகியுள்ளார். டெல்லியை சேர்ந்தவர் சுரேஷ் ரெய்னா (33). இந்திய அணியின் முக்கிய ஆட்டக்காரர்களில் ஒருவராக விளங்கிய ரெய்னா, 2015ம் ஆண்டுக்கு பிறகு தேசிய அணியில் இடம் பிடிக்கவில்லை. எனினும், ஐபிஎல் டி20  தொடர்களில் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். டோனிக்கு பிறகு சிஎஸ்கே ரசி்கர்களின் அதிக ஆதரவை பெற்றவர். சமீபத்தில் டோனி மற்றும் ரெய்னா இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ஐபிஎல் டி20ல் தொடர்ந்து விளையாட உள்ளதாக அறிவித்திருந்தனர்.

கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டதும், ஜூன் மாதம் முதல் டெல்லி காசியாபாத்தில் உள்ள அரங்கில் ரெய்னா தொடர்ந்து வலைப்பயிற்சி செய்து வந்தார்.இந்நிலையில் ஐபிஎல் தேதி அறிவிக்கப்பட்டதும் ரெய்னா உற்சாகமானார். யுஏஇ செல்வதற்கு முன்பு சென்னையில் நடைபெற்ற குறுகிய கால பயிற்சி முகாமிலும் டோனி உள்ளிட்ட வீரர்களுடன் பங்கேற்றார். ஆக. 21ம் தேதி துபாய் சென்ற சிஎஸ்கே அணிக்கு நேற்று முன்தினத்துடன் தனிமைப்படுத்துதல் முடிந்துவிட்டது. வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மீண்டும் பரிசோதனை செய்ததில் வேகப் பந்துவீச்சாளர் ஒருவருக்கும், 12 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சிஎஸ்கே தலைமை செயலதிகாரி காசி விசுவநாதன் சமூக ஊடகமொன்றில் நேற்று பதிவிட்ட தகவலில், ‘சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பியுள்ளார். அவர் இந்த தொடர் முழுவதும் விளையாட மாட்டார். இந்த நேரத்தில் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சிஎஸ்கே தனது முழுமையான ஆதரவை அளிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியை தொடங்க முடியாத  இக்கட்டான நிலையில், அணியின் முக்கிய வீரரான ரெய்னா திடீரென விலகியுள்ளது பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது.


Tags : withdrawal ,Super Kings ,IPL ,Suresh Raina , IPL series, Suresh Raina, dismissal, Super Kings, setback
× RELATED ரச்சின் 46, ருதுராஜ் 46, துபே 51 சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி