வீட்டில் கொள்ளையடிக்க வந்த கும்பலால் சுரேஷ் ரெய்னாவின் மாமா படுகொலை: பஞ்சாப்பில் கொடூரம்

சண்டிகர்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின், மாமாவை கொள்ளையடிக்க வந்த கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார். அவருடைய அத்தை கவலைக்கிடமாக இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா. இவருடைய மாமா அசோக் குமார். பஞ்சாப் மாநிலம், பதன்கோட் மாவட்டத்தில் உள்ள தரியால் கிராமத்தில் வசித்து வந்தார். அரசுப் பணி ஒப்பந்ததாரர். கடந்த 19ம் தேதி இரவு அசோக் குமாரின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த கொள்ளை கும்பல், வீட்டில் இருந்த நகைகள், பணத்தை கொள்ளையடித்தது.

அதை தடுக்க வந்த அசோக் குமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது கொள்ளையர்கள் கடுமையாக தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்த அசோக் குமார், அன்றிரவே உயிரிழந்தார். அவரது 80 வயதான தாய், மனைவி ஆஷாதேவி மற்றும் மகன்கள் அபின், கவுசல் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆஷாதேவி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கொள்ளையர்களால் அசோக் குமார் கொல்லப்பட்ட தகவல், ஒரு வாரத்துக்குப் பிறகு இப்போதுதான் தெரிய வருகிறது. இதற்கான காரணம் கூறப்படவில்லை. இந்த கொலை, கொள்ளை சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

* காரணம் இதுதானா?

துபாயில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவதற்காக சுரேஷ் ரெய்னா சென்றிருந்தார். சமீபத்தில்தான், சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான அறிவிப்பை டோனி அறிவித்த அன்றே வெளியிட்டார். இந்நிலையில், நேற்று காலை துபாயில் இருந்து சொந்த காரணங்களுக்காக நாடு திரும்புவதாக அறிவித்த ரெய்னா. உடனடியாக இந்தியா புறப்பட்டார். தனது மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காகதான் அவர் அவசரமாக திரும்பியதாக கருதப்படுகிறது. கொள்ளை கும்பலால் கொலை செய்யப்பட்ட அசோக் குமார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களுள் ஒருவரான சுரேஷ் ரெய்னாவின் மாமா ஆவார். கிரிக்கெட் வீரரின் உறவினர் கொல்லப்பட்டதை தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Related Stories:

>