×

ஊரடங்குக்கு முன்பு பொருளாதாரம் எப்படி சீரழிந்தது? நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் கேள்வி

புதுடெல்லி: ‘ஊரடங்குக்கு முன்பே பொருளாதாரம் சீரழிந்தது எப்படி என்பதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்க வேண்டும்,’ என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். ஜிஎஸ்டி கவுன்சிலின் 41வது கூட்டம் இருதினங்களுக்கு முன்பு காணொலி வாயிலாக நடந்தது. கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய நிதி அமைச்சர், கடவுளின் செயலால் உருவான கொரோனா காரணமாக பொருளாதாரம் மோசமடைந்துள்ளது என்று பேசினார். நிதி அமைச்சரின் இந்த கடவுள் வர்ணனைக்குப் பல எதிர்க்கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரம் தொடர்ச்சியாக இது தொடர்பாக டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

அவற்றில் அவர், ‘கொரோனாவை கடவுளின் செயல் என்றும், அதனாலேயே, வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் நிதி அமைச்சர் கூறியிருக்கிறார். கடவுளின் தூதரான நிதி அமைச்சர், ஊரடங்குக்கு முன்பே எப்படி வருவாய் இழப்பு ஏற்பட்டது என்பதை விளக்க வேண்டும். 2017-ம் ஆண்டிலிருந்து நடப்பு நிதியாண்டு 2020 வரை ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புக்கு தவறான பொருளாதாரக் கொள்கைகள்தான் காரணம் என்பதை ஏன் ஒப்புக்கொள்ளவில்லை. ஊரடங்கால் மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை சமாளிக்க மத்திய அரசு உதவவில்லை. அதற்குப் பதிலாக சந்தை விற்பனை மூலமும், ரிசர்வ் வங்கி வழியாகவும் சமாளிக்க ஆலோசனை கூறியுள்ளது. இந்த 2 வழிகாட்டுதல்களுமே மாநிலங்களின் தலையில் மேலும் சுமையை அதிகப்படுத்தும் முயற்சிதான். இந்த அப்பட்டமான விதி மீறலை மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது,’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

* ராகுல் காந்தியும் கண்டனம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், நிதி அமைச்சரின் கடவுள் வர்ணணைக்கு பதிலடி கொடுத்துள்ளார். ‘பணமதிப்பிழப்பு நடவடிக்கை, தவறான ஜிஎஸ்டி அமல், திட்டமிடாத ஊரடங்கு இந்த மூன்றுமே நாட்டின் பொருளாதாரத்தை முடக்கி விட்டது. கடவுளின் செயல் அல்ல,’ என்று தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : curfew ,Nirmala Sitharaman ,P. Chidambaram , Before the curfew, how did the economy deteriorate? To Nirmala Sitharaman, P. Chidambaram question
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...