×

பண மதிப்பிழப்பை, மதிப்பு குறைப்பில் சேர்ப்பு நிபுணர்களின் தவறான கீ ஆன்சரால் எஸ்ஐ தேர்வில் பலரது வாய்ப்பு பறிப்பு: அடுத்த கட்ட தேர்வுக்கு அனுமதிக்க உத்தரவு

மதுரை: எஸ்ஐ தேர்வில் நிபுணர்களின் தவறான கீ ஆன்சரால் சரியான விடையளித்தோரின் வாய்ப்பு பறி போயுள்ளதாக கூறியுள்ள ஐகோர்ட் கிளை, அடுத்தக்கட்ட தேர்வுக்கு அவர்களை அனுமதிக்க உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த அபினேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் காலியாகவுள்ள எஸ்ஐ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்தாண்டு மார்ச் 8ல் வெளியானது. கடந்த ஜன.12ல் எழுத்துத்தேர்வு நடந்தது. முதல்கட்டமாக வெளியான கீ ஆன்சர்படி எனக்கு 48.5 மதிப்பெண் கிடைத்தது. இதன்படி, பிசி பிரிவில் எனக்கு வேலை கிடைக்கும். பின்னர் வெளியான இறுதி கீ ஆன்சரில் வினா எண் 47க்கான விடை மாறியிருந்தது. இதனால், எனக்கு 48 மதிப்பெண் மட்டுமே கிடைத்ததால் வாய்ப்பு பறிபோனது.

வினா எண் 47ல், கடந்த 1947க்குப்பிறகு இந்திய நாணயம் எத்தனை முறை மதிப்பு குறைக்கப்பட்டது என கேட்கப்பட்டது. இதற்கு 3 முறை என்பதே சரியான விடை. ஆனால், பண மதிப்பிழப்பு செய்யப்பட்டது 4 முறை என்பதால், அதை சரியான விடை என குறிப்பிட்டு மதிப்பெண் வழங்கியுள்ளனர். பண மதிப்பு குறைப்பு என்பது வேறு, பண மதிப்பிழப்பு என்பது வேறு. கடந்த 2016ல் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பை, தவறுதலாக மதிப்பு குறைப்பு என கருதி 4 முறை என தவறான விடைக்கு மதிப்பெண் அளித்துள்ளனர். எனவே, சரியான விடை அளித்த என்னை, அடுத்த கட்ட தேர்வுக்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இதேபோல், ராஜ்குமார் என்பவரும் மனு செய்திருந்தார். இந்த மனுக்களை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார். மனுதாரர்கள் வக்கீல் லூயிஸ் ஆஜராகி, “பல்வேறு நிபுணர்களின் கருத்துகள் அடிப்படையில் 3 என்பதே சரியான விடை. இறுதி கீ ஆன்சரில் தவறான விடையை சரி என குறிப்பிட்டுள்ளனர்” என்றார்.

* இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
பொருளாதார நிபுணர்கள் 4 முறை என்பதே சரியான விடை என கூறியுள்ளனர். இதுவரை 3 முறை மதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ல் ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்டது. 4 முறை என்பதே சரியான விடை என்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர்களான நிபுணர்களின் தவறான கருத்து. நிபுணர்களின் தவறான கருத்து அடிப்படையில் இறுதி கீ ஆன்சர் வெளியிடப்பட்டுள்ளது. சரியான விடையளித்த பலருக்கு மதிப்பெண் மறுக்கப்பட்டுள்ளது. தவறான விடையளித்த பலருக்கு கூடுதல் மதிப்பெண் கிடைத்திருக்கும். இது  தேர்வு நடைமுறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நிபுணர்களின் தவறான விடையால் பலருக்கான வாய்ப்புகள் பறிபோயுள்ளது. தவறான விடைகளின் அடிப்படையில் வெளியான கீ ஆன்சர் தவறானது அல்லது செல்லாதது என அறிவிக்கப்படுகிறது. மனுதாரர்கள் இருவரும் சரியான விடையளித்துள்ளதால் அவர்களுக்கு 0.5 மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். இருவரும் அடுத்தக்கட்ட தேர்விற்கு அனுமதிக்கப்பட வேண்டும். இந்த நடைமுறைகளை 2 வாரத்தில் முடிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் தேர்வாணையம் தகுதியான நிபுணர்களின் கருத்தை அறிய வேண்டும். இரு முறை நிபுணர்களின் கருத்தை அறியலாம் என உத்தரவிட்டுள்ளார். நிபுணர்களின் தவறான விடையால் பலருக்கான வாய்ப்புகள் பறிபோயுள்ளது.

Tags : Depreciation Admission Experts ,Many ,Phase Exam , Cash Depreciation, Depreciation Addition, Expert, Incorrect Key Answer, SI Exam, Opportunity Flush, Next Phase Exam, Allow
× RELATED மருத்துவமனை, பொது இடங்களில் தீ...