×

திமுகவின் ஆற்றல் வாய்ந்த சொத்து ஒன்றை இழந்திருக்கிறோம்: முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் படத்தை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: திமுகவின் ஆற்றல் வாய்ந்த சொத்து ஒன்றை இழந்திருக்கிறோம் என்று முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் படத்தை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேசினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான (மறைந்த) அ.ரகுமான்கான் திருவுருவப் படத்தினை காணொலிக் காட்சி வாயிலாகத் நேற்று திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். இந்தக் காணொலிக் கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் இ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற குழுத் துணைத் தலைவர் கனிமொழி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் நே.சிற்றரசு மற்றும் மறைந்த அ.இரகுமான்கான் குடும்பத்தார்- திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ரகுமான்கான் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
திமுகவின் ஆற்றல் வாய்ந்த சொத்து ஒன்றை நாம் இழந்திருக்கிறோம். ஏதோ ஒன்று பறிபோன உணர்வை நான் அடைகிறேன்!. என்னைப் பொறுத்தவரை ரகுமான்கானை நான் 1980ம் ஆண்டுகளில் ஒரு ஸ்டாராகப் பார்த்தேன். நானெல்லாம் அப்போது சட்டமன்றத்தில் நுழையாத காலம். கட்சிப்பணி ஆற்றி வந்த காலம். எம்.ஜி.ஆர். ஆட்சி நடக்கிறது. ஓராண்டு காலம் சிறை வாசத்தில் இருந்து வெளியில் வந்திருக்கிறோம். பலருக்கும் பலவிதமான நெருக்கடிகள் சூழ்ந்த காலம். அந்தக் காலக்கட்டத்தில் எங்களுக்கு உற்சாகம் ஊட்டும் செய்திகள் சட்டமன்றத்தில் இருந்து தான் வரும்.

அன்றைய அதிமுக ஆட்சியின் அவலங்களை சட்டமன்றத்தில் தன்னுடைய ஆணித்தரமான வாதங்களின் மூலமாக தலைவர் கலைஞர் எடுத்து வைப்பார். அவரைப் போலவே ஒரு இளைஞர் படையும் சட்டமன்றத்தில் புகுந்து கலக்கிக் கொண்டு இருந்தது. அதில் மிக முக்கியமானவர், பொருளாளர் துரைமுருகன். அடுத்து முக்கியமானவர், இன்று நம் முன்னால் படமாக இருக்கக் கூடிய ரகுமான்கான். மறைந்த க.சுப்பு. இவர்களை அந்தக் காலத்தில் இடி, மின்னல், மழை என்று அழைப்பார்கள் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும்.

இந்த இடியையும்-மின்னலையும்-மழையையும் உருவாக்கிய இயற்கைத் தலைவர்தான் நம்முடைய தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர். காவல்துறை மானியம் என்றாலே, “ரகுமான்கான் பேசட்டும்” என்று தலைவர் சொல்லும் அளவுக்கு ஸ்டாராக இருந்தார். அதற்குக் காரணம், அச்சம் என்பதே அவருக்கு இருந்ததில்லை. ஆளைப் பார்த்தால் பவ்யமானவர் போலத் தெரிவார். ஆனால் யாராவது தனக்குப் பிடிக்காததைச் சொன்னால் பாய்ந்து விடுவார். அவரை எப்படியாவது அதிமுகவில் சேர்த்துக்கொள்ள முதல்வர் எம்.ஜி.ஆர். தூது விட்டார். அதனை அவர் ஏற்கவில்லை. “எனக்கு பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் தான் முக்கியம்” என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட்டார் ரகுமான்கான்.

போனஸ் பிரச்னைகள், தொழிலாளர் பிரச்னைகள், உடல் உழைப்புத் தொழிலாளர் நலத்திட்டம் ஆகியவற்றை திறம்படக்கையாண்டார். குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பில் தீவிர அக்கறை காட்டினார். எப்போது என்னைத் தொடர்பு கொண்டாலும் உற்சாகமாகப் பேசுவார். என்னுடைய அறிக்கைகள், பேச்சுகளைப் பாராட்டுவார். ஸ்டார் பேச்சாளரான ரகுமான்கான் என்னைப் பாராட்டுவதை எனக்குக் கிடைத்த பெருமையாகவே நினைத்துக் கொள்வேன். அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். சட்டமன்றத்தில் புகுந்து கலக்கிக் கொண்டு இருந்த துரைமுருகன், இரகுமான்கான், க.சுப்புவை அந்தக் காலத்தில் இடி, மின்னல், மழை என்று அழைப்பார்கள்.

Tags : Raghumankan ,opening ,MK Stalin ,DMK ,speech , DMK, a powerful asset, we have lost one, former minister Raghumankan opens the film, MK Stalin's speech
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...