தூத்துக்குடி அருகே போலீஸ் குவிப்பு, பதற்றம் விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க தொடரும் எதிர்ப்பு: வழியெங்கும் கடும் சோதனை

ஸ்பிக்நகர்: விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் பொட்டல்காடு, குலையன்கரிசல் பகுதியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் சுற்று வட்டார பகுதியில் விவசாய நிலங்கள் வழியாக ஐஓசிஎல் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாற்றுப்பாதையை தேர்வு செய்யக்கோரியும் பொட்டல்காடு கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாற்றுப்பாதையை ஆய்வு செய்கிறோம் என்று மாவட்ட நிர்வாகம் வாக்குறுதி கொடுத்திருந்த நிலையில், பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பொட்டல்காடு சந்தனமாரியம்மன் கோயில் வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று காலை போராட்டத்துக்கு மக்கள் திரண்டு சென்றனர். அப்போது கோயில் வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால் அதிர்ச்சியடைந்தனர். மேலும் கோயில் வளாகத்துக்கு மக்கள் செல்லாதபடி தடுப்புகளும் வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து தங்களது தெருக்களுக்கு சென்ற பொதுமக்கள், எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். தகவலறிந்து தூத்துக்குடி சப்-கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் கலோன், தாசில்தார் செல்வக்குமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாய நிலங்களை தவிர்த்து எரிவாயு குழாய் பதிக்க மாற்றுப்பாதையை தேர்வு செய்ய அதிகாரிகளிடம் கிராம மக்கள் வலியுறுத்தினர். அதுவரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தனர்.

இது குறித்து பொட்டல்காடு ஊர் தலைவர் செல்வசேகர் கூறுகையில், கடந்த போராட்டத்தின் போது மாவட்ட நிர்வாகம் 500 மீட்டருக்கு அப்பால் குழாய்கள் பதிப்பதற்கு முயற்சிக்கிறோம் என்று கூறியது. ஆனால் தற்போது அதே இடத்தில் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாற்றுப்பாதையில் குழாய் அமைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும், என்றார். இதனிடையே பொட்டல்காடு, குலையன்கரிசல் கிராமங்களுக்கு செல்லும் அனைத்து வழிகளிலும் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் அத்திரமரப்பட்டி, முத்தையாபுரம் உள்ளிட்ட இடங்களிலும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

Related Stories:

>