×

பருப்பு நிறுவனத்தின் பெயரில் வங்கியில் ரூ.50.73 கோடி கடன் வாங்கி மோசடி: சகோதரர்கள் கைது

மதுரை: மதுரை, மேற்குமாரட் வீதியில் உள்ள அரசுடைமை வங்கியின் முதுநிலை மேலாளர் நாகராஜன், போலீஸ் துணை கமிஷனர் பழனிகுமாரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: மதுரை காமராஜர் சாலையைச் சேர்ந்த சிங்காரவேலு மகன் சுருளிவேலு, அவரது சகோதரர் சிவா சிங்காரவேலு ஆகிய இருவரும் பங்குதாரராக நிறுவனம் நடத்தி வருகின்றனர். இதில் பருப்பு, நெல், மற்றும் அரிசி வகைளை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். இந்நிறுவனத்தின் மூலம் எங்கள் வங்கியில் கடன் விதியை ஒப்புக்கொண்டு ரூ.78 கோடி ஆவணங்களின்படி ரூ.50.73 கோடி கடன் பெற்றுள்ளனர். அதை முறையாக திருப்பி செலுத்தவில்லை.

பங்குதாரர்கள் வங்கியில் கடன் பெறுவதற்காக பொய்யான கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர். மேலும் நிறுவனத்தின் வரவு, செலவு கணக்கு விபரங்களை வங்கியில் சமர்ப்பிக்கவில்லை. கடன் தொகையை, கடன் வாங்கிய காரணத்திற்காக பயன்படுத்தாமல் குழு நிறுவனங்களின் பெயரில் வரவு-செலவுகள் செய்து மோசடி செய்துள்ளனர். எனவே, 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்தனர். அதனைத்தொடர்ந்து, சுருளிவேலு, அவரது சகோதரர் சிவா சிங்காரவேலு ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். கைதான இருவரும் அமெரிக்காவில் இருந்து பருப்பு இறக்குமதி செய்ததில் ரூ.19 கோடி வரை மோசடி செய்துள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.


Tags : Brothers ,lentil company ,bank , Pulses company, in name, bank, Rs 50.73 crore loan, fraud, brothers arrested
× RELATED சங்ககிரி அருகே கழுகை விரட்ட...