×

கப்பலூர் தொழிற்பேட்டையில் மாசுவை தடுக்க காடு வளர்ப்பு திட்டம்

திருமங்கலம்: கப்பலூர்  தொழில்பேட்டையில் வெப்பநிலை மற்றும் மாசுவை குறைக்க அடர்ந்த காடுகள்  திட்டத்தின் கீழ் 42 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் தொழில்பேட்டை அமைந்துள்ளது. சென்னை அம்பத்தூருக்கு அடுத்த பெரிய சிட்கோவான இங்கு 450க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் உள்ளன. 16 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். சிட்கோவில் வெப்பநிலை மற்றும் மாசுவை தடுக்கும் பொருட்டு கப்பலூர் தொழில்லதிபர்கள் சங்கம் சார்பில் மரக்கன்று நட முடிவு செய்யப்பட்டது. இதன்படி சிட்கோவிலுள்ள 700 ஏக்கர் நிலப்பரப்பில் ‘கிரீன் கப்பலூர் திட்டம்’ என்ற பெயரில் மரக்கன்று நடவு செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அடர்ந்த காடுகள் வளர்ப்பு திட்டம்  4 ஏக்கர் நிலப்பரப்பில் துவக்கப்பட்டுள்ளது. ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ரோட்டரி டிஸ்ட்ரிக்ட் 3000 சங்கத்தின் நிதி உதவியுடன் இந்த திட்டத்தில் 42 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

நேற்று மாலை சிட்கோவில் நடைபெற்ற விழாவில் கலெக்டர் வினய் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். இதுகுறித்து கப்பலூர் சிட்கோ தலைவர் ரகுநாதராஜா கூறுகையில், ‘சிட்கோவில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி குறைக்க தொழில்பேட்டை முழுவதும் மரக்கன்று நட முடிவு செய்து பணி துவக்கப்பட்டுள்ளது. அதிகளவில் மரங்கள் இருந்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது. மாசுவும்  குறையும்’ என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட ரோட்டரி செயலாளர் மணி, ரோட்டரி நிர்வாகிகள் சோமசேகர், கண்ணதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : area ,Kappalur , Kappalur, Industrial Estate, Afforestation Project
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...