கொரோனா பரவல் அச்சம்: வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வர டிசம்பர் 31 வரை தடையை நீட்டித்தது மலேசிய அரசு!

கோலா லம்பூர்: கொரோனா பரவல் அச்சம் காரணமாக மலேசியாவுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வர டிசம்பர் 31 வரை தடையை நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8.40 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 8,40,431 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 2,48,88,312 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17,276,727 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 60,94,544-ஆக அதிகரித்துள்ளது.

உலக நாடுகள் பலவற்றில் கொரோனா பரவல் குறைந்துவரும் நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதேவேளையில், அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன், மெக்சிகோ, பிரேசில் போன்ற நாடுகளில் தொற்று குறையாமல் பாதிப்பும் தொடர்கிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா பரவல் முற்றிலுமாக குறைந்துள்ளது.  இந்நிலையில், மலேசியாவில் சுற்றுலா தொடர்பாக முக்கியமான அறிவிப்பை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதன்படி மலேசியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வர தற்போது தடை உள்ளது. அந்தத் தடை 2020ம் ஆண்டின் இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அயல்நாட்டு எல்லைகள் மூடப்பட்டிருப்பது தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. மலேசியாவில் 9306 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 9030 பேர் குணம் அடைந்துவிட்டனர். 125 பேர் இறந்துவிட்டனர். தற்போது புதிய நோயாளிகள் அதிகரித்து வருவதால் மலேசிய அரசு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அந்நாட்டு பிரதமர் முஹையதின் யாசின், உலகம் முழுவதும் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதாகவும், இங்கு நோய் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அவ்வப்போது பாதிப்பு ஏற்படுவதாகும் தெரிவித்துள்ளார்.

Related Stories: