×

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற டாக்டர் உட்பட இருவர் கைது: சிஐடி போலீசார் நடவடிக்கை

சென்னை: தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் சிவசண்முகம் தெருவை சேர்ந்த மருத்துவர் தீபன் (28), ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் ரூ.22  ஆயிரத்துக்கு விற்பதாக காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு சிஐடி இன்ஸ்பெக்டர் விநாயகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு டாக்டர் தீபனை செல்போனில் தொடர்பு கொண்ட சிஐடி இன்ஸ்பெக்டர் விநாயகம் தனக்கு 6 ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுகிறது என்றும், அதனை மேடவாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே, கொண்டு வந்து தருமாறு கூறினார். இதனை உண்மை என நம்பிய மருத்துவர் தீபன் தனது உதவியாளர் நவீன் (26) என்பவருடன், 6 ரெம்டெசிவிர் மருந்துகளை எடுத்து வந்தார். அங்கு மறைந்திருந்த காஞ்சிபுரம் மாவட்ட சிஐடி போலீசார் இருவரையும் கைது செய்து, பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மருத்துவர் தீபன் சேலையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருவதும், அவரது உதவியாளர் நவீன் வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்தவர் என்பதும், இவர் சேலையூரில் உள்ள ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். ஏற்கனவே ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்பனை செய்ததாக சென்னையில் 2 டாக்டர்கள் உள்பட 10 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனை தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற டாக்டர் உட்பட இருவர் கைது: சிஐடி போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : CIT ,Chennai ,Doctor ,Deepan ,Sivasanmugam Street ,Venkaivasal, Tambaram ,Dinakaran ,
× RELATED நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி!:...