×

இரவுநேரத்தில் இருள்சூழ்ந்த குகையாக காட்சியளிக்கிறது 2 கோடியில் தொடங்கியும் முடிவடையாத ரயில்வே மேம்பால பணி: காட்பாடியில் வாகன ஓட்டிகள் கடும் அவதி

வேலூர்: காட்பாடி சித்தூர் சாலையில், தமிழகம்-ஆந்திராவை இணைக்கும் மிக முக்கிய மேம்பாலமாக காட்பாடி ரயில்வே மேம்பாலம் உள்ளது. 1989ம்  ஆண்டு கட்டப்பட்டது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பாலம் தமிழகம்-ஆந்திராவிற்கு முக்கிய போக்குவரத்து வழித்தடமாக உள்ளது. அதேபோல், காட்பாடி மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த மக்கள், வேலூர் வர இப்பாலத்தை பயன்படுத்த வேண்டும். முக்கிய பாலமாக திகழும்  இப்பாலம் காலப்போக்கில் மின்கம்பங்கள் காற்றில் சாய்ந்தும், தூண்கள் விரிசல்விட்டு, சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து போனது. அதேபோல், பாலத்திற்கு கீழ் பகுதியில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து பயணிகள் மீது விழுந்து வந்தது. பாலத்தில் பஸ்கள் சென்றாலே பாலம்  தடதடக்கும். இதனால், பாதசாரிகள் அச்சத்துடனே செல்வார்கள்.

குறுகிய மேம்பாலம் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பாலத்தை கடக்க முடியாமல் ஆம்புலன்ஸ்களும் காத்திருக்க வேண்டும். பாலத்தின்  மீது மின்விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்த குகை போல காட்சியளிக்கும், மழைக்காலங்களில் குளம்போல் மாறி விடுகிறது.இப்படி பாலத்தை கடக்கும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதற்கிடையே தான் கடந்த ₹2 கோடியில் பாலத்தை நவீன முறையில்  சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. அப்போதே, பாலத்தை புதிதாக கட்டாமல் சீரமைத்தால் போக்குவரத்து நெரிசலுக்கு எப்படி தீர்வு காண முடியும்  என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. ஆனாலும் எந்த அதிகாரிகளும் எதிர்காலத்தை யோசிக்காமல், ₹2 கோடியில் சீரமைப்பு பணிகளை  தொடங்கினர்.

2 ஆண்டுகளை நெருங்கும் நிலையில் மேம்பாலப்பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட நாடாளுமன்ற  உறுப்பினர்கள் குழு தலைவராக உள்ள, வேலூர் எம்பி கதிர்ஆனந்தின் சொந்த ஊரான காட்பாடியில், ரயில்வே மேம்பாலப்பணிகள் ஆமை வேகத்தில்  நடந்து வருகிறதே என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே, ரயில்வே மேம்பாலப்பணிகளை துரிதப்படுத்தவும், தற்போது கட்டி வரும் பாலத்தின் அருகே புதிய மேம்பாலம் அமைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலத்தின் அருகே புதிய பாலம் வேண்டும்
காட்பாடி பொதுமக்கள் கூறியதாவது: ‘காட்பாடி ரயில்வே மேம்பாலத்திற்கு அருகே மற்றொரு புதிய பாலத்தினை கட்டுவதற்கு 40 கோடியில் திட்ட  அறிக்கை தயார் செய்தனர். ஆனால், அதனை கைவிட்டு, 2 கோடியில் இருக்கும் பாலத்தை சீரமைக்க முடிவு செய்து விட்டனர். ஆனால், அந்த  பணிகளும் முழுமையடையவில்லை. புதிய பாலம் கட்ட முட்டுக்கட்டை போட்டது யார்? என்று தெரியவில்லை. புதிய பாலம் கட்டாவிட்டால், அவசர  கதியில் ஆம்புலன்ஸ்சில் செல்லும் நோயாளிகள் நிலை பரிதாபத்தில் தான் முடியும். எனவே, அரசு மக்களின் உயிரோடு விளையாடாமல், பாலத்தின்  அருகே மற்றொரு புதிய பாலம் அமைக்க வேண்டும். அரியூரில் கட்டிய ரயில்வே மேம்பாலத்தை போல், காட்பாடியில் கட்டியிருக்கலாம். ஸ்மார்ட்  சிட்டி திட்டத்தின் மூலம் பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்திருக்கலாம். இவ்வாறு கூறினர்.

Tags : cave , looks,like,dark , night.
× RELATED கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு நேர அவகாசம்