×

சீருடை பணியாளர் தேர்வு இறுதி கீ ஆன்சர் குளறுபடி- எஸ்.ஐ. தேர்வர்களின் வாழ்விலும் விளையாடிய பண மதிப்பிழப்பு: ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு

மதுரை : குமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த அபினேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் காலியாகவுள்ள எஸ்ஐ பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஜன.12ல் எழுத்து தேர்வு நடந்தது. முதல் கட்டமாக வெளியான கீ ஆன்சர்படி எனக்கு 48.5 மதிப்பெண் கிடைத்தது. இதன்படி, பிசி பிரிவில் எனக்கு வேலை கிடைக்கும். இதனிடையே, கடந்த மார்ச்சில் வெளியான இறுதி கீ ஆன்சரில் வினா எண் 47க்கான விடை மாறியிருந்தது. இதன்படி, எனக்கு 48 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது. இதனால், எனக்கான வாய்ப்பு பறிபோனது.

வினா எண் 47ல், கடந்த 1947க்கு பிறகு இந்திய நாணயம் எத்தனை முறை மதிப்பு குறைக்கப்பட்டது என கேட்கப்பட்டது. இதற்கு 3 முறை என்பதே சரியான விடை. ஆனால், பண மதிப்பிழப்பு செய்யப்பட்டது 4வது முறை என்பதால், அதை சரியான விடை என குறிப்பிட்டு மதிப்பெண் வழங்கியுள்ளனர். பண மதிப்பு குறைப்பு என்பது வேறு, பண மதிப்பிழப்பு என்பது வேறு. கடந்த 2016ல் மேற்ெகாள்ளப்பட்ட பண மதிப்பிழப்பை, தவறுதலாக மதிப்பு குறைப்பு என கருதி 4 முறை என தவறான விடைக்கு மதிப்பெண் அளித்துள்ளனர். இதனால், 3 முறை என சரியாக பதிலளித்த பலருக்கு மதிப்பெண் குறைந்துள்ளது. எனவே, சரியான மதிப்பெண் அளித்த என்னை, அடுத்த
கட்ட தேர்வுக்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இதேபோல், ராஜ்குமார் என்பவரும் மனு செய்திருந்தார்.

இந்த மனுக்களை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பொருளாதார நிபுணர்கள் 4 முறை என்பதே சரியான விடை என கூறியுள்ளனர். மதிப்பு குறைப்பிற்கும், மதிப்பிழப்பிற்கும் வித்தியாசம் உள்ளது. மதிப்பு குறைப்பு என்பது இந்திய பணத்தின் மதிப்பு அமெரிக்க டாலருடன் ஒப்பிடும் போது குறைவாக இருக்கும். அமெரிக்க டாலருக்கு ரூ.70 என்பது, மதிப்பு குறைப்பிற்கு பிறகு ரூ.80 என்ற அளவில் இருக்கும். இந்த முறையில் இதுவரை 3 முறை மதிப்பு குறைக்கப்பட்டுள்ளது.கடந்த 2016ல் ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்டது. இதன்மூலம் 99 சதவீத அளவிற்கான ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பியது. கருப்பு பணம், ஊழல், போலி நோட்டுகள் உள்ளிட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே மதிப்பிழப்பாகும்.

இதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். 4 என்பதே சரியான விடை என்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர்களான நிபுணர்களின் தவறான கருத்தாகும். இவர்கள் தான் மாணவர்களுக்கு பாடம் நடத்து கிறார்கள் என்பது துரதிஷ்டவசமானதாகும். நிபுணர்களின் தவறான கருத்து அடிப்படையில் இறுதி கீ ஆன்சர் வெளியிடப்பட்டுள்ளது. சரியான விடையளித்த பலருக்கு மதிப்பெண் மறுக்கப்பட்டுள்ளது. தவறான விடையளித்த பலருக்கு கூடுதல் மதிப்பெண் கிடைத்திருக்கும். இதை சாதாரணமாக பார்க்க முடியாது. தேர்வு நடைமுறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.நிபுணர்களின் தவறான விடையால் பலருக்கான வாய்ப்புகள் பறிபோயுள்ளது. சம்பந்தப்பட்ட துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களே நிபுணர் குழுவில் இருக்க வேண்டும்.

தவறான விடைகளின் அடிப்படையில் வெளியான கீ ஆன்சர் தவறானது அல்லது செல்லாதது என அறிவிக்கப்படுகிறது. மனுதாரர்கள் இருவரும் சரியான விடையளித்துள் ளதால் அவர்களுக்கு 0.5 மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். இதனடிப்படையில் இருவரும் அடுத்தகட்ட தேர்விற்கு அனுமதிக்கப்பட வேண்டும். இந்த நடைமுறைகளை 2 வாரத்தில் முடிக்க வேண்டும்.இனிவரும் காலங்களில் தேர்வாணையம் தகுதியான நிபுணர்களின் கருத்தை அறிய வேண்டும். ஒரே முறை மட்டுமின்றி, இரண்டாம் கட்டமாக நிபுணர்களின் கருத்தை அறியலாம் என உத்தரவிட்டுள்ளார்.  




Tags : selectors , Uniform Staff Selection Final Key Answer Mess - SI. Cash Depreciation played in the lives of the selectors: ICC Madurai Branch Action Order
× RELATED சர்வர் கோளாறு காரணமாக டி.என்.பி.எஸ்.சி....