×

நாமக்கல்லில் கலப்பட டீசலை பயோ டீசல் என கூறி ஏமாற்றி விற்ற கும்பல்: ஒருவர் கைது; 2 டேங்கர் லாரிகள் பறிமுதல்

நாமக்கல்: நாமக்கல்லில் பயோடீசல் என்ற பெயரில், கலப்பட டீசலை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும், 2 டேங்கர்  லாரிகளை பறிமுதல் செய்தனர். நாமக்கல்  மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இரவு நேரங்களில் பயோ டீசல் என்ற பெயரில் ஆந்திர  மாநிலம் மற்றும் சென்னையில் இருந்து டேங்கர்  லாரிகளில் கொண்டு வரப்படும்  கலப்பட டீசல், வாகனங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக இந்தியன் ஆயில்  கார்ப்பரேசன் நிறுவன அதிகாரிகள்,  கலெக்டர் மெகராஜிடம் புகார் அளித்தனர். இதையடுத்து கலெக்டர்  உத்தரவுபடி, வருவாய்த்துறை மற்றும் மாவட்ட வழங்கல் துறை அலுவலர்கள்,  நேற்று இரவு  நாமக்கல் அடுத்த வள்ளிபுரம் பைபாஸ் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது  பைபாசில் இருந்து சற்று  தொலைவில் மறைவான இடத்தில், டேங்கர் லாரியில்  இருந்து வாகனங்களுக்கு ஒரு கும்பல் டீசல் நிரப்புவதை கண்டுபிடித்தனர்.  உடனடியாக  அங்கு அலுவலர்கள் சென்றனர். இதை பார்த்த 3 பேர், வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடி விட்டனர்.

இதையடுத்து டேங்கர் லாரியை பரிசோதனை செய்ததில், அதன் உள்ளே கலப்பட டீசல் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து  2 டேங்கர்  லாரிகள் மற்றும் 3500  லிட்டர் கலப்பட டீசலை  பறிமுதல் செய்து, நாமக்கல் குடிமைப்பொருள்  கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம்  ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை  நடத்தி, கலப்பட டீசல் விற்பனை செய்த, நாமக்கல் மாவட்டம், செம்பாறைபுதூரை  சேர்ந்த முத்துசாமி  என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலத்தின் பல பகுதிகள் மற்றும் சென்னையில்  இருந்து கொண்டு  வரப்படும் கலப்பட டீசலை, பயோ டீசல் என கூறி, ஒரு லிட்டர்  டீசல் ₹60க்கு விற்பனை செய்து வந்தது தெரிந்தது. விலை குறைவு என கூறி, நாமக்கல்லை சேர்ந்த லாரி டிரைவர்களிடம், கலப்பட டீசலை விற்பனை செய்து  மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த  மோசடியில் தொடர்புடைய நபர்களை போலீசார்  தேடி வருகிறார்கள்.Tags : Gang ,Namakkal , Gang ,arrested , blended, diesel , 2 tanker, trucks
× RELATED திப்புராயபேட்டையில் ஆயுதங்களுடன்...