×

வடமாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்காக சரக்கு ரயிலில் ‘ரிக்’ வண்டிகளை ஏற்றி மீண்டும் சோதனை ஓட்டம்: கட்டணம் குறித்து பேச்சுவார்த்தை

திருச்செங்கோடு: வடமாநிலங்களுக்கு சரக்கு ரயிலில் ரிக் வண்டிகளை அனுப்புவதற்கு முன்னோட்டமாக, ஆனங்கூர்- மகுடஞ்சாவடி இடையே 30 கி.மீ  தூரம் மீண்டும் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. இதையடுத்து, கட்டணம் குறித்து ரயில்வே அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.இந்தியாவிலேயே  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில்தான் அதிகமான ரிக் வண்டிகள்  உள்ளன.  சுமார் 4 ஆயிரம் ரிக் வண்டிகள் இப்பகுதியை  சேர்ந்தவர்களால் இயக்கப்பட்டு  வருகின்றன. இவை பெரும்பாலும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம். உத்தரபிரதேசம்,  டெல்லி, மகாராஷ்டிரா  போன்ற  வடமாநிலங்களில் ஆழ்துளை கிணறுகள்  அமைக்கும்  பணியில் ஈடுபட்டு வருகின்றன. பழுது பார்க்கவும், சர்வீஸ்  செய்யவும் தமிழகத்திற்கு வரும்  ரிக் வண்டிகளையும், புதிய ரிக் யூனிட்களையும், வட  மாநிலங்களுக்கு அனுப்பும் போது, பல்வேறு பிரச்னைகளை சந்திக்க   வேண்டியுள்ளது. இதற்கு  தேவையின்றி எரிபொருள் அதிகம்  செலவாகிறது. தவிர,  ஒவ்வொரு மாநிலத்திலும் வரிகட்ட வேண்டியுள்ளது. சுங்கச்சாவடிகளில் கட்டணம்,  போலீசாரின் கெடுபிடிகள், ரவுடிகளின்  அட்டகாசம் ஆகியவற்றை  எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண, ரிக்  உரிமையாளர்கள் சங்கம், தென்னக ரயில்வேயை அணுகியது. ரிக் வண்டிகளை சரக்கு  ரயில்களில்  அனுப்ப, ரயில்வே நிர்வாகமும் அனுமதி அளித்தது. சரக்கு ரயிலில்  ரிக் வண்டிகளை அனுப்பும் போது பாலங்கள், மேலே செல்லும் மின்கம்பிகளில்   உரசுமா?, சுரங்க நுழைபாலங்களில் செல்ல சிரமம் ஏற்படுமா என்பதை அறிய,  திருச்செங்கோடு அடுத்த ஆனங்கூர் ரயில் நிலையத்தில் ஏற்கனவே  சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பல தரப்பட்ட ரிக் வண்டிகளை கொண்டு ஜூலை 25ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 6ம் தேதிகளில்  இரு கட்டங்களாக  சோதனை நடந்தது. இதை தொடர்ந்து நேற்று, மூன்றாம் கட்டமாக பல ரக  ரிக் வண்டிகள் ஏற்றப்பட்ட சரக்கு ரயில், ஆனங்கூரில் இருந்து மகுடஞ்சாவடி  வரை  30 கிமீ  தூரம் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது. ரயில்வே  அதிகாரிகள், ரிக் உரிமையாளர்கள் சங்க தலைவர் சீனிவாசா கந்தசாமி, செயலாளர்   கொங்கு சேகர், பொருளாளர் சுந்தரராஜன், துணைத் தலைவர் அசோக்குமார் ஆகியோர் சரக்கு ரயிலில் சென்று, இந்த சோதனை ஓட்டத்தை   பார்வையிட்டனர்.

தொடர்ந்து  ரிக் வண்டிகளை கொண்டு செல்ல  தனி சரக்கு ரயில் அளவிடப்பட வேண்டும். ஒரு  ரயிலில் 30 ரிக் யூனிட்டுகளை ஏற்ற முடியும். இதற்கான கட்டணம் குறித்த   பேச்சுவார்த்தைகள், தென்னக ரயில்வே அதிகாரிகளுடன் நடந்து வருவதாக ரிக்  உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள்  தெரிவித்தனர். இந்தியாவிலேயே  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில்தான் அதிகமான ரிக் வண்டிகள்  உள்ளன.  சுமார் 4 ஆயிரம் ரிக் வண்டிகள்  இப்பகுதியை சேர்ந்தவர்களால் இயக்கப்பட்டு  வருகின்றன.


Tags : run ,Rick ,Negotiations ,North ,Negotiation ,Northlands Loader , ‘Rick’ , freight, train,Northlands, charge
× RELATED பராக் – சாம்சன் ஜோடி அமர்க்களம்: ராஜஸ்தான் 196 ரன் குவிப்பு