×

தினகரன் நாளிதழ் செய்தியால் கலெக்டர் நடவடிக்கை பட்டினியில் வாடிய மூதாட்டி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்

சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் பசி, பட்டினியுடன் தவித்த மூதாட்டி, தினகரன் செய்தி எதிரொலியால் நேற்று முதியோர் காப்பகத்தில்  சேர்க்கப்பட்டார்.திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி, மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பாக்கியத்தம்மாள் (75). கணவர், மகன்கள் இறந்த நிலையில், முதியோர்  உதவித்தொகை மூலம் வாழ்க்கை நடத்தி வந்தார். கடந்த 7 மாதமாக உதவித்தொகை நிறுத்தப்பட்டது. இதனால், ஆதரவற்ற நிலையில், மேட்டுப்பட்டி  அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயில் வாசலில் பிச்சை எடுக்க தொடங்கினார். கொரோனா ஊரடங்கால் கோயிலும் மூடப்பட்டது. இதனால், கோயில் எதிரே உள்ள கட்டிடத்தில் தங்கி பசி, பட்டினியுடன் வாழ்ந்து வந்தார். இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் நேற்று செய்தி  வெளியானது. இதைப் பார்த்த திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமி, பாக்கியத்தம்மாளை முதியோர் காப்பகத்தில் சேர்க்க உத்தரவிட்டார்.

இதையடுத்து சப்-கலெக்டர் சிவகுமார், ஆத்தூர் தனி தாசில்தர் சரவணவாசன், சின்னாளபட்டி வருவாய் ஆய்வாளர் பாக்கியலெட்சுமி, அம்பாத்துரை  விஏஓ ஜெயலட்சுமி ஆகியோர்  மேட்டுப்பட்டிக்கு வந்து பாக்கியத்தம்மாளிடம் விசாரித்தனர். அப்போது, 7 மாதமாக உதவித்தொகை வரவில்லை என  மூதாட்டி புகார் தெரிவித்தார்.
 இதுதொடர்பாக செம்பட்டி நிலைய தபால்காரரை வரவழைத்து விசாரித்தனர். அதன்பின் ஆத்தூர் சமூகநல அலுவலரிடம், மூதாட்டியை முதியோர் காப்பகத்தில் சேர்க்க சப்-கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து மூதாட்டியை  ஆட்டோவில் ஏற்றி, ஏசுபாளையத்தில் செயல்படும் புனித அன்னை தெரசா முதியோர் காப்பகத்தில் சேர்த்தனர்.

நன்றி மறவாத ஜீவன்
பாக்கியத்தம்மாளை ஆட்டோவில் ஏற்றியவுடன், அவருடன் இருந்த வளர்ப்பு நாய், ஆட்டோ அருகே பரிதாபமாக நின்றது. அதிகாரிகளை சுற்றி, சுற்றி  வந்தது. இதை பார்த்த சப்-கலெக்டர் சிவக்குமார் நாய்க்கு பிஸ்கட் மற்றும் தயிர் சாதம் வாங்கிக் கொடுக்க பணம் கொடுத்தார். பாக்கியத்தம்மாள்  ஆட்டோவில் ஏறிச் சென்றவுடன், அந்த நாய் அங்குமிங்கும் ஓடியது பரிதாபத்தை ஏற்படுத்தியது.



Tags : newspaper ,Dhinakaran ,collector ,lady ,collector action , old lady ,ollector , Dinakaran, newspaper, archive
× RELATED தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக...