×

ஊரடங்கால் பொருளாதாரம் சரிந்த நிலையில் கந்து வட்டி கும்பலால் ஏழைகள் பாதிப்பு: காவல்துறை மீது கட்டப்பஞ்சாயத்து புகார்

வேலூர்: ஊரடங்கால் பொருளாதாரம் சரிந்த நிலையில் கந்து வட்டி கும்பலிடம் சிக்கி ஏழைகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மேலும்  காவல்துறையினர் கந்து வட்டி குறித்து புகார் தெரிவித்தால் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக புகார் எழுந்துள்ளது.கொரோனா பாதிப்பை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் பல கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கில் கட்டுப்பாடுகள்  தளர்த்தப்பட்டு ஓரளவு இயல்புநிலை திரும்ப தொடங்கினாலும், பொருளாதாரம் பல ஆண்டுகள் பின்நோக்கி சென்றுவிட்டது. இந்த பொருளாதார சரிவை  மீட்டெடுக்க மீண்டும் பல ஆண்டுகள் தேவைப்படும் என தெரிகிறது.இந்நிலையில் ஊரடங்கு காரணமாக தொழில் துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 1.89 கோடி பேர் வரை வேலைவாய்ப்பை  இழந்துள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ஆய்வு முடிவுகளில் தெரியவந்தது. இதுபோன்ற சூழ்நிலையில் ஏழைகளும், நடுத்தர  மக்களும் வட்டிக்கு கடன் வாங்கி பிழைப்பு நடத்த வேண்டியுள்ளது. அதேபோல் கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறு வியாபாரிகள் காய்கறி  உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இதற்கான முதலீடு இல்லாமல், சிறு வியாபாரிகளும் வட்டிக்கு கடன் வாங்கி வருகின்றனர்.

இதை சாதகமாக்கி கொண்ட சிலர் மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, அவர் வட்டி, தண்டல் என்று கந்து வட்டி வசூலிக்க தொடங்கிவிடுகின்றனர். இதனால்  வட்டிக்கு கடன் வாங்கியவர்கள், வாங்கிய பணத்தைவிட கூடுதலாக செலுத்திவிடுகின்றனர். ஆனாலும் அசல் தொகை கழியாமல் அப்படியே  இருக்கிறது. ஒரு கட்டத்தில் கடன் வாங்கியவர்கள், வட்டி செலுத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதையடுத்து அடியாட்களை வைத்து  மிரட்டி சொத்துகளை எழுதி வாங்குவது போன்ற நடவடிக்கைகளில் பணம் கொடுத்தவர்கள் ஈடுபடுகின்றனர்.மேலும் கந்து வட்டி குறித்து புகார் கொடுக்க சென்றால், சம்பந்தப்பட்டவர்களிடம் மாமூல் வாங்கிக்ெகாண்டு காவல்துறையினர் கட்டப்பஞ்சாயத்து  செய்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. கந்து வட்டி கொடுமையால் தற்கொலை சம்பவங்களும் நடந்தது. கடந்த 2017ம் ஆண்டு நெல்லை கலெக்டர்  அலுவலகத்தில் ₹1.50 லட்சம் கடனுக்காக கந்து வட்டி கேட்டு மிரட்டிய கும்பலால் கூலித்தொழிலாளி மனைவி, 2 குழந்தைகளுடன் தீக்குளித்தார்.  அப்போது கந்து வட்டி கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டப்பட்டது.

இதற்காக தமிழக அரசால் புகார் எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.  ஆனால் ஒரு சில நாட்களில் கந்து வட்டி மீதான புகார்கள் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் வேதனை  தெரிவிக்கின்றனர். எனவே, கந்து வட்டி குறித்து புகார் அளிக்க வேண்டிய சிறப்பு எண்களை போலீஸ் நிலையங்கள், கலெக்டர் அலுவலகம் ஆகிய  இடங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே கந்து வட்டி  கும்பலால் அவதிக்குள்ளாகும் ஏழைகளின் கோரிக்கையாகும்.

3 ஆண்டு சிறை தண்டனை
கடன் கொடுப்பவர்கள் ஆண்டுக்கு 18 சதவீதத்துக்கு மேல் வட்டி வசூலிப்பது கந்து வட்டி தடை சட்டம் 2003 பிரிவு 4ன்படி தண்டனைக்குரிய குற்றம்.  அதன்படி கந்து வட்டி வசூலிப்பவர்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டு கடுங்காவல் சிறை மற்றும் ₹30 ஆயிரம் அபராதம் விதிக்க பரிந்துரைக்க முடியும்.  ஆனால் கந்து வட்டி வசூலித்ததற்கான ஆதாரங்கள் தேவை.

வரதட்சணைக்கு முற்றுப்புள்ளி எப்போது?
கொரோனா காலத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் அதிகப்படியான கூட்டம் சேரக்கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.  இதனால் திருமணங்கள் சாதாரணமாக நடத்தப்படுகிறது. மணமகன் வீட்டாருக்கு செலவுகள் குறைந்துள்ள நிலையில், மணமகன் வீட்டில் வரதட்சணை  கேட்பது குறைந்தபாடில்லை. இதனால் மணமகள் வீட்டார் கடன் வாங்குவது தொடர்கதையாகி வருகிறது. தற்போது தங்கம் விலையும் தாறுமாறாக  உயர்ந்துள்ளது. மணமகள் வீட்டார் பெண்ணுக்கு முடிந்தளவு சீர்வரிசை செய்வதில் தவறு கிடையாது. ஆனால் கட்டாயமாக வரதட்சணை கேட்பது சட்டப்படி குற்றம்.  இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு சராசரியாக ஒரு பெண் வரதட்சணை கொடுமையால் இறப்பதாகவும், 32 சதவீதம் குற்றவாளிகள் மட்டுமே  தண்டனை பெறுவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே வரதட்சணை கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்பதால், கந்து வட்டியில்  ஏழைகள் சிக்குவதற்கான வாய்ப்புகள் குறையும்.

கடன் கொடுத்தவர்களும் பாதிப்பு
அடியாட்களை வைத்து கந்து வட்டி வசூலிப்பவர்களால், கடன் வாங்கியவர்கள் பாதிப்பு அடைகின்றனர். அதேபோல் நியாயமான வட்டிக்கு கடன்  கொடுத்தவர்கள் மீதும், அவசர தேவைக்காக வட்டியில்லாமல் கடன் கொடுத்தவர்கள் மீதும் கந்து வட்டி தடை சட்டத்தின் கீழ் புகார் அளிக்கப்படுவதாக  குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால், வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை முறையாக பின்பற்றாமல் இருப்பதே  இதற்கு காரணம். எனவே நியாயமான வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் அதற்கான வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.

வங்கிகளில் கடன் கிடைப்பதில் சிக்கல்
வங்கிகளில் கடன் வாங்குபவர்கள் மாதந்தோறும் கடன் தவணை திரும்ப செலுத்த உத்தரவாதம் அளிக்கும் வகையில், மாத சம்பளம் பெறும்  ஆதாரங்களை சமர்ப்பிப்பது அவசியம். ஆனால் பலர் வேலை இழந்துள்ளதால் வங்கி கடன் வாங்குவதிலும் சிக்கல் எழுந்துள்ளது. மேலும் கொரோனா  கட்டுப்பாட்டிற்கு வராமல் இதே வேகத்தில் பரவினால் மற்றவர்களுக்கும் வேலை நீடிக்குமா? என்பதே சந்தேகம்தான். இதனால் பணியில்  இருப்பவர்களுக்கும் கடன் கொடுக்க வங்கிகள் அச்சப்படுவதாக கூறப்படுகிறது.

Tags : victims ,gangs ,Kattapanchayattu ,victim ,gang , curfew ,economy, collapsing,vested,Kattapanchayattu complaint , police
× RELATED கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில்...