×

நாகர்கோவில் நகருக்குள் அத்துமீறி நுழையும் டாரஸ் லாரிகள்: மரண பயத்தில் தவிக்கும் பொதுமக்கள்

நாகர்கோவில்: நாகர்கோவிலுக்குள் அணிவகுக்கும்  டாரஸ் லாரிகளால் நெருக்கடியும், விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு பஸ்கள் இயக்கப்படாவிட்டாலும் கூட, நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடி குறைந்த பாடில்லை.  மாநகரில் உள்ள அனைத்து சாலைகளும் தோண்டப்பட்டு பாதாள சாக்கடை பணிகள், குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருவதால், வாகனங்கள்  செல்வதில் கடும் சிரமம் உள்ளது. அரசு பஸ்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் இயங்காவிட்டாலும் கூட, மற்ற வாகனங்களின் எண்ணிக்கை  அதிகரித்துள்ளது. குறிப்பாக பைக், கார்கள் அதிகளவில் நகருக்குள் வருகின்றன. இதனால் முக்கிய சாலைகள் அனைத்தும் நெருக்கடியால்  திணறுகின்றன.ஏற்கனவே நெருக்கடியை குறைக்கும் வகையில் காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி  வரையிலும் லாரிகள் நகருக்குள் வர தடை உள்ளது. கொரோனா காலத்தில் பஸ்கள் இயங்காததால், இந்த உத்தரவை போக்குவரத்து போலீசார்  செயல்படுத்துவதில்லை. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மணல், கற்களை ஏற்றிக்கொண்டு வரும் டாரஸ் லாரிகளின் வரத்து  அதிகரித்துள்ளது.

ஆரல்வாய்மொழியிலிருந்து நெடுமங்காடு சாலை வழியாக இறச்சகுளம் வந்து சுங்கான்கடை செல்ல வேண்டிய டாரஸ் லாரிகள், நகருக்குள் அத்துமீறி  நுழைந்த வண்ணம் உள்ளன. காலை வேளையில் அதிகமாக டாரஸ் லாரிகள் வருவதால், இதர வாகன ஓட்டிகள் அச்சப்படுகிறார்கள்.  போலீசார்  அவ்வப்போது வடசேரி சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு, டாரஸ் லாரிகளுக்கு அபராதம் விதித்தாலும் டாரஸ் லாரிகளின் வருகையை  கட்டுப்படுத்த முடிய வில்லை. எனவே போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் டாரஸ் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் வந்து  செல்ல கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.அரசு பணிகளுக்கு கற்கள், ஜல்லிகள், பாறை பொடிகள் ஏற்றி செல்லும் டாரஸ் லாரிகளாக இருந்தாலும் கூட இரவு வேளையிலும், போக்குவரத்து  நெருக்கடி இல்லாத சமயங்களிலும் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : city ,civilians ,Taurus ,Nagercoil , Taurus ,lorries ,trespassing ,mortal, fear
× RELATED ரிஷபம்