×

புதிய தளர்வுகள் ஏதுமின்றி செப். 30 வரை ஊரடங்கு நீட்டித்தது ஜார்க்கண்ட் அரசு: மக்கள் ஏமாற்றம்

ராஞ்சி: புதிய தளர்வுகள் ஏதுமின்றி வருகிற செப். 30ம் தேதி வரை ஊரடங்கை நீடித்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கான ஊரடங்கு கட்டுப்பாடுகளை செப். 30ம் தேதி வரை நீடித்து ஜார்க்கண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘செப். 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது. அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். புதிய வழிகாட்டுதலில் சிறப்பு விலக்கு எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் கட்டுப்பாட்டு மண்டலத்திற்கு வெளியே நடத்திக் கொள்ளலாம். அதே நேரத்தில், சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார மற்றும் மத நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், ஊர்வலங்கள் மற்றும் பிற பெரிய நிகழ்வுகள் தொடர்ந்து தடை செய்யப்படும்.

வழிபாட்டு தலங்களில் குறைந்த எண்ணிக்கையில் பங்கேற்க சில இடங்களில் அனுமதிக்கப்படும். பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூடப்படும். சினிமா அரங்குகள், நீச்சல் குளங்கள், ஜிம்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், தியேட்டர்கள், பார்கள், சட்டசபை அரங்குகள் மற்றும் பிற அரங்குகள் மூடப்பட்டிருக்கும். பொது போக்குவரத்து இருக்காது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘கொரோனா வைரஸ் தொற்றுக்கான ஊரடங்கு கட்டுப்பாடுகள் செப். 30ம் தேதி வரை நீடிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தை பொறுத்தமட்டில் கொேரானா தொற்று பாதிப்பு 35,813 ஆகவும், பலி எண்ணிக்கை 389 ஆகவும் உள்ளது.



Tags : government ,Jharkhand , Sept. without any new relaxations. Jharkhand government extends curfew till 30: People disappointed
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...