காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினரால் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை : துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம்!!

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 3 தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். புல்வாமா மாவட்டம் சடூரா பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று இரவு முதலே அதிரடியாக நுழைந்து போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் தேடுதலில் ஈடுபட்டபோது, அங்கிருந்த தீவிரவாதிகள் போலீஸாரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர் இருதரப்புக்கும் இடையே நடந்த கடும் சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.

இதுகுறித்து ஸ்ரீநகரில் உள்ள பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கர்னல் ராஜேஷ் கலியா கூறுகையில், “ தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று அதிகாலை 1 மணி இருந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள். அவர்களிடம் இருந்து 1 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், 2 கைத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இந்த துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்” எனத் தெரிவித்தார்.

இந்த என்கவுண்ட்டர் சம்பவத்தையடுத்து இன்னமும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் மேலும் தீவிரவாதிகள் மறைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேடலை முடுக்கி விட்டுள்ளனர்.இது தொடர்பான மேல் விவரங்கள் இனிதான் தெரியவரும்” என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>