பெங்களூரில் கடத்தப்பட்ட சிறுமி செங்கல்பட்டில் மீட்பு: பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைப்பு

செங்கல்பட்டு: பெங்களூரில், கடத்தப்பட்ட சிறுமி, செங்கல்பட்டில் பத்திரமாக மீட்கப்பட்டு, அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டார். செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியில், நேற்று முன்தினம் மாலை, ஒரு சிறுமி சாலையில் நின்று அழுது கொண்டிருந்தாள். இதை பார்த்ததும், அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள், சிறுமியிடம் விசாரித்தனர். ஆனால் அவள், தமிழ் மற்றும் கன்னடம் கலந்து பேசியதால், அவர்களுக்கு புரியவில்லை. இதையடுத்து, சிறுமியை மீட்டு, செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது போலீசார் சிறுமியிடம் விசாரித்தனர். அதில், பெங்களூர் ஜேபி நகர் ஐயப்பா கோயில் தெருவை  சேர்ந்தவர் கணேஷ் (42). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ரக்ஷிதா(15). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார்.

நேற்று முன்தினம் காலை ரக்ஷிதா, பால் வாங்குவதற்காக வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது அங்கு, வேனில் வந்த மர்மநபர்கள் 2 பேர், ரக்ஷிதாவிடம், உன் தந்தைக்கு அடிபட்டு விட்டது, அவரை  மருத்துவமனையில் சேர்த்துள்ளோம் என கூறி அழைத்தனர். அதற்கு  ரக்ஷிதா, தனது தாயையும் அழைத்து வருவதாக கூறினாள். அதற்குள் மர்மநபர்கள், சிறுமியை வலுக்கட்டாயமாக,  வேனின் பின்பக்க கதவை திறந்து ஏற்றினர். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமி, ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என கூச்சலிட்டார். உடனே மர்மநபர்கள், சிறுமியின் வாய் மற்றும் கையை கட்டி பெங்களூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தனர். வரும் வழியில், போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்ததால், செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியில் நேற்று, சிறுமியை இறக்கி விட்டு, மர்மநபர்கள் தப்பிவிட்டனர் என தெரிந்தது.

தொடர்ந்து போலீசார், சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல குழுமத்திடம் சிறுமியை ஒப்படைத்தனர். அதன்பேரில், நேற்று காலை சிறுமியின் தந்தை கணேஷ் மற்றும் அவரது உறவினர்கள் செங்கல்பட்டு வந்தனர். அவர்களிடம் சிறுமி ரக்ஷிதாவை, செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தினர்  பத்திரமாக ஒப்படைத்தனர். மர்மநபர்கள் சிறுமியை பணத்துக்காக கடத்தினார்களா, தொழில் போட்டியா அல்லது வேறு காரணமா என செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>