×

பைக்கில் சென்று கொண்டிருந்தபோது நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் படுகாயம்

திருப்போரூர்: திருப்போரூரில், ரவுடிகள் பைக்கில் கொண்டு சென்ற நாட்டு வெடிகுண்டு வெடித்து, 2 பேர் பாடுகாயமடைந்தனர். தமிழகம் முழுவதும், கொரோனா ஊரடங்கு காரணமாக கடைகள் அனைத்து, இரவு 7 மணிக்கு அடைக்கப்படுகிறது. இதையொட்டி, திருப்போரூர் ஓஎம்ஆர் சாலையில் அனைத்து கடைகளும், நேற்று இரவு 7 மணிக்கே அடைக்கப்பட்டது. இதனால், அச்சாலை முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில், சுமார் 9.35 மணியளவில், திருப்போரூர் பஸ் நிலையம் எதிரே, 2 பேர் சென்ற பைக் திடீரென வெடித்தது. அதில், இருந்த 2 பேர் படுகாயமடைந்தனர். அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியதுடன், புகை மண்டலமாக காட்சியளித்தது. பயங்கர சத்தத்துடன் வெடித்ததால், அப்பகுதி மக்கள், அலறியடித்து கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தனர். அப்போது, 2 பேர் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து, மயங்கி கிடந்தனர்.

தகவலறிந்து திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, 2 பேரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரிடம் விசாரித்தனா். அதில், செங்கல்பட்டு அடுத்த ராமபாளையத்தை சேர்ந்த விக்கி (எ) விக்டர், அன்வர் என தெரிந்தது. மேலும், திருப்போரூர் பஸ் நிலையம் வழியாக சென்னை நோக்கி பைக்கில் சென்றபோது, அடையாளம் தெரியாத யாரோ, அவர்கள் மீது ஒரு பையை வீசியதாகவும், அது திடீரென வெடித்ததாகவும் கூறினர். ஆனால், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், பைக் மீது யாரும் பையை வீசவில்லை. அவர்கள் வைத்திருந்த பை வெடித்ததாக கூறினர். ஆனால், சென்னையில் உள்ள ரவுடிகளை கொல்வதற்காக, திட்டம் தீட்டி வெடிகுண்டுகளை தயார் செய்து, அதை எடுத்து சென்றபோது, வெடித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் நடந்த பகுதியில் போலீசார் சோதனை செய்த போது சுமார் 100 அடி தூரத்தில் ஒரு பையும் அதில் ஒரு நாட்டு வெடிகுண்டும் இருப்பதை கண்டுபிடித்தனர்.

Tags : Thiruporur , Thiruporur, bike, country bomb, 2 people, injured
× RELATED மெரினாவில் பைக் ரேஸ் 10 பேர் சிறையிலடைப்பு