×

அயப்பாக்கத்தில் பணி தொடக்கம்: 26 ஆண்டுகளுக்கு பிறகு காவல் நிலையம் சீரமைப்பு

ஆவடி: அயப்பாக்கத்தில் 425 ஏக்கர் பரப்பளவில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் 94ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இங்கு, தற்போது சுமார் 10 ஆயிரம் குடியிருப்புகளும், சுமார் 3 ஆயிரம் வணிக வளாகங்கள் உள்ளன. மேலும், திருவள்ளுவர், மருதம் உள்ளிட்ட அடுக்குமாடி குயிருப்புக்களும் உள்ளன. இங்கு சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உருவாகும் போதே, அனைத்து வசதியுடன் பல லட்சம் செலவில் காவல் நிலையம் கட்டப்பட்டது. அதன்பிறகு, இந்த காவல் நிலையம் 26 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் இன்று வரை மூடியே கிடக்கிறது. இதற்கு, வீட்டு வசதி வாரியத்திற்கு, உரிய தொகையை காவல்துறை நிர்வாகம் செலுத்தி கையகப்படுத்தவில்லை. இதனால், இந்த கட்டடத்தில் உள்ள கதவு, ஜன்னல்களை உள்ளிட்ட பொருட்களை சமூக விரோதிகள் திருடி சென்றனர்.

மேலும், கட்டிடம் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருப்பதால், தற்போது கட்டிடத்தின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இங்கு இரவு நேரங்களில் கஞ்சா புகைப்பது, மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடைபெற்றது. இதனால், இப்பகுதியில் அடிக்கடி சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனையடுத்து, அப்பகுதி மக்கள் சார்பில் காவல் நிலையத்தை திறக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.  மேலும், தினகரன் நாளிதழ் வாயிலாக பல முறை புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதற்கிடையில், சமீபத்தில் மதுரவாயல் தொகுதி எம்.எல்.ஏவும், அமைச்சருமான பெஞ்சமின், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து காவல் நிலையத்தை திறந்து வைக்க கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் பெஞ்சமின் காவல் நிலைய கட்டிடத்தை அதிகாரிகளுடன் வந்து ஆய்வு செய்தார். இதன் பிறகு, தற்போது காவல் கட்டிடத்தின் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து கட்டிடத்தை சுற்றி உள்ள முட்புதர்கள், மேல் பகுதியில் வளர்ந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், சமூக விரோதிகளால் திருடி செல்லப்பட்ட கதவு, ஜன்னல்கள் மாற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும், விரிசல் ஏற்பட்ட கட்டிடம் சிமெண்ட் பூசி சீரமைக்கப்பட்டு வருகிறது. சுற்று சுவர், நுழைவு வாயில் உள்ளிட்டவை அமைக்கும் பணிகளும் நடக்கிறது. இதனால், காவல் நிலைய கட்டிடம் விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Tags : police station , Ayappakkam, start of work, police station, renovation
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...