×

பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க உள்ளே விடாததால் விஜயகாந்த் வீட்டில் ரகளை: போதை வாலிபரால் பரபரப்பு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்துடன் சாலிகிராமம் வீட்டில் வசித்து வருகிறார். இவர், தனது பிறந்தநாளை கடந்த 25ம் தேதி வீட்டில் கொண்டாடினார். அப்போது, குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் விஜயகாந்த் வீட்டிற்கு வந்தார். வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி, வந்தவரிடம் நீங்கள் யார் என்று கேட்டுள்ளார். அதற்கு, ‘‘நான் தேமுதிக கட்சி உறுப்பினராக இருக்கிறேன். தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற வந்துள்ளேன். விஜயகாந்தை நேரில் பார்த்து வாழ்த்து சொல்ல வேண்டும்,’’ என்று கூறியுள்ளார்.

உடனே, இரவு நேரம் என்பதால் விஜயகாந்தை பார்க்க முடியாது என்று காவலாளி கூறியுள்ளார். அந்த வாலிபர் மது போதையில் இருந்ததால், வீட்டின் உள்ளே காவலாளி அனுமதிக்கவில்லை. ஆனால் அந்த வாலிபர், ‘‘நான் தலைவரை பார்த்துவிட்டு தான் இங்கிருந்து செல்வேன்’’ எனக்கூறி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால், வேறு வழியின்றி சம்பவம் குறித்து காவலாளி விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து சென்று விசாரணை நடத்தினர். அதில், துரைப்பாக்கத்தை சேர்ந்த வெற்றிவேல் (35) என்பதும், தேமுதிக நிர்வாகி என்பதும் தெரியவந்தது. மேலும், ரகளையில் ஈடுபட்ட வெற்றிவேல் கட்சி நிர்வாகி என்பதால் அவர் மீது புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.  இதனால் போலீசார் வெற்றிவேலிடம் இனி இதுபோன்று சம்பவங்களில் ஈடுபட மாட்டேன் என்று எழுதி வாங்கிக்கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Vijaykanth ,house ,birthday , Birthday, Greetings, Vijaykanth, Excitement
× RELATED இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா?