×

ஒருதலை காதலால் வேலையிலிருந்து நீக்கம்: ஓட்டல் உரிமையாளர் மகனை கடத்திய ஊழியர்: நண்பருடன் கைது

சென்னை: ஒருதலை காதலால் வேலையில் இருந்து நீக்கிய காரணத்தால், உரிமையாளர் மகனை கடத்திய ஊழியர் நண்பருடன் கைது செய்யப்பட்டார். தாம்பரம் அடுத்த மதனபுரம், சுராஜ் அவென்யூவில் வசித்து வருபவர் தங்கராஜ் (44). இவர், மதனபுரம் பிரதான சாலையில் உணவகம் நடத்தி வருகிறார். இவரது மகன் நவஜீவன் (16), அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று நவஜீவன் தங்களது உணவகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவரை வழிமறித்த மர்ம நபர்கள், காரில் கடத்திச் சென்றனர். பின்னர் தங்கராஜை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், நவஜீவனை கடத்தி உள்ளதாகவும், .5 லட்சம் கொடுத்தால், நவஜீவனை ஒப்படைப்பதாக மிரட்டினர். அதிர்ச்சியடைந்த தங்கராஜ் இதுகுறித்து பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், தாம்பரம் காவல் கூடுதல் துணை ஆணையர் அசோகன் தலைமையில், சேலையூர் காவல் உதவி ஆணையர் சகாதேவன் மற்றும் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த  சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் எண் மற்றும் மர்ம நபர்கள்  பேசிய செல்போன் சிக்னல் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

அதில், நவஜீவனை கடத்தி சென்ற கார் செங்கல்பட்டு நோக்கி செல்வது தெரியவந்தது. இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் மறைமலை நகர் காவல்நிலைய ஆய்வாளர் நந்தகுமார் ஆகியோருக்கு தகவல் கொடுத்துவிட்டு, போலீசார் செங்கல்பட்டு நோக்கி விரைந்தனர். மறைமலைநகர் அருகே போலீசார், நவஜீவனை கடத்திச் சென்ற மர்ம கும்பலை மடக்கி பிடித்தனர். பின்னர், அவர்களை, காவல் நிலையம் அழைத்து வந்தது விசாரித்தனர்.
அதில், தங்கராஜின் உணவகத்தில் ஹரிகரன் (21) என்பவர் ஒரு வருடத்திற்கு முன்பு  வேலை பார்த்துள்ளார். அவர் தங்கராஜின் உறவினர் பெண்ணை ஒருதலைபட்சமாக காதலித்துள்ளார். இவ்விஷயம் தங்கராஜூக்கு தெரியவர ஹரிகரனை வேலையில் இருந்து நிறுத்தினார். இதனால், ஆத்திரமடைந்த ஹரிகரன் தங்கராஜின் மகனை கடத்த திட்டமிட்டார்.

இதற்காக, தற்போது உளுந்தூர்பேட்டையில் தான் வேலை செய்யும் ஓட்டலில், உடன் வேலை செய்யும் நண்பர் விக்னேஷ் என்பவரின் உதவியை நாடியுள்ளார். பின்னர், இருவரும் வாடகை காரில் தங்கராஜின்  மகனை கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து, ஹரிகரன் (21), அவரது நண்பர் விக்னேஷ் (20) மற்றும் வாடகை கார் ஓட்டுநர் சரத்குமார் (29) ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags : hotel owner ,kidnapping , Hotel owner, son, kidnapping, employee, arrested
× RELATED பஞ்சாப்பில் வழிப்பறியில் ஈடுபட்ட நைஜீரியா, கானா நாட்டு பெண்கள் கைது