×

செப். 1 முதல் நூலகங்கள் திறப்பு: அரசாணை வெளியானது

சென்னை: கொரோனா ஊரடங்கு முடியவுள்ள நிலையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் அனைத்து நூலகங்களும் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலம் முடிய உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. முதற்கட்டமாக செப்டம்பர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் நூலகங்கள் இயங்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் நேற்று அரசாணை பிறப்பித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பொது நூலகத்துறையின் கீழ் கன்னிமரா நூலகம் 1, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் 1, மாவட்ட மைய நூலகங்கள் 32, முழு நேர கிளை நூலகங்கள் 314, கிளை நூலகங்கள் 1612, நடமாடும் நூலகங்கள் 14, கிராம நூலகங்கள் 1915, பகுதி நேர நூலகங்கள் 749 என மொத்தம் 4,638 நூலகங்கள் இயங்கி வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இந்த நூலகங்கள் மூடப்பட்டுள்ளது. தற்போது, பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு அமைப்புகள் சார்பில் நூலகங்களை திறக்க கோரிக்கை வைத்துள்ளதாக பொது நூலகத்துறை இயக்குநர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். நூலகத்துறை இயக்குநரின் கடிதத்தின் பேரில் அரசு பரிசீலித்து, பகுதி நேர நூலகங்கள் தவிர மற்ற நூலகங்கள் ெசப்டம்பர் 1ம் தேதி முதல் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதன் விவரம்:

* கன்னிமரா, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், முழு நேர  கிளை நூலகங்களில் உள்ள புத்தகங்கள் எடுத்துக் கொடுக்கும் பிரிவு, பரிந்துரை புத்தகங்கள் உள்ள பிரிவு, சொந்த புத்தகங்களை படிக்கும் பிரிவுகள் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
* புத்தகங்களை வாசகர்கள் சுற்றுக்கு வழங்கும் பிரிவுகள் கிளை நூலகங்கள், கிராம நூலகங்களில் மட்டும் இயங்கலாம்.
* நூலகங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரைதான் செயல்பட வேண்டும்.
* கிளை நூலகங்கள், கிராம நூலகங்கள் வழக்கமான பணி நேரமான மதியம் 2 மணிவரை இயங்கலாம்.
* பகுதி நேர நூலகங்கள் திறக்க அனுமதியில்லை.
* அனைத்து நூலகங்களிலும் நாளிதழ்கள் பிரிவுக்கு வாசகர்கள் அனுமதிக்க கூடாது.
*  நூலகர்கள், நூலகப் பணியாளர்கள் முகக் கவசம் மற்றும் கையுறைகளை அவசியம் அணிய வேண்டும்.
* வாசகர்கள் கேட்கும் நூல்களை நூலடுக்குகளில் இருந்து, நூலக பணியாளர்கள் தான் எடுத்துக் கொடுக்க வேண்டும்.
* 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நூலகங்களில் அனுமதியில்லை.
* 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 65 வயதுக்கு மேல் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் நூலகத்தில் அனுமதி இல்லை.
* கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள நூலகங்கள் ஊரடங்கு முடியும் வரை திறக்க அனுமதியில்லை. மேலும் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள நபர்கள் அந்த நூலகங்களில் சென்று படிக்க அனுமதியில்லை.
* நூலகங்களில் குளிர் சாதன வசதிகளுக்கு அனுமதியில்லை.
* சொந்த புத்தகங்களை எடுத்து வந்து படிப்போர் தங்கள் புத்தகங்கள் மற்றும் லேப்டாப்களை மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது. மேலும் அந்த பிரிவில் இருந்து நூலகத்தின் வேறு பிரிவுகளுக்கு எந்த பொருளும் எடுத்துச் செல்லக் கூடாது.
* புத்தகம் படிக்கும் பிரிவில் குழுவாக அமர்ந்து ஆலோசிக்கவோ விவாதிக்கவோ அனுமதிக்க கூடாது.
* நூலகங்களுக்கு வரும் வாசகர்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை சிறு துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்த பிறகு, நூலகப் பணியாளர்கள் அந்த புத்தகங்களை எடுத்து வந்து கொடுக்க வேண்டும்.
* நூலகங்களுக்கு வருவோரில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் புத்தகம் படிக்கும் பிரிவு மற்றும் பரிந்துரை நூல்கள் பிரிவுக்கு அனுமதிக்க வேண்டும். மேற்கண்டவை தவிர அரசு அறிவித்துள்ள கொரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் நூலகங்களில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். நூலகங்களுக்கு வருவோர் கண்டிப்பாக தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதிக்க வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Libraries ,Government ,Opening , Sep. 1, Libraries, Opening, Government
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...