×

உரிய காலத்தில் கடன் தவணை கட்டவில்லை என்றால் வட்டிச்சலுகை கிடையாது என்பதா?: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்

சென்னை: உரிய காலத்தில் கடன் தவணை கட்டவில்லை என்றால் வட்டிச்சலுகை கிடையாது என்பதா என தமிழ்நாடு விவாசாயிகள் சங்க பொதுச்ெசயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்று விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா நோய்த்தொற்று காரணமாக தவணை தொகை வசூல் செய்ய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின் பேரில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டிருந்தார். விவசாயிகள் பெறும் பயிர்க்கடன்களை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு மத்திய அரசு 3 சதவீதமும், மாநில அரசு 4 சதவீதமும் வட்டி மானியமாக வழங்கி வருகிறது. உரிய காலத்தில் கடனை திருப்பிச் செலுத்த ஊக்கப்படுத்தும் விதமாக இந்த சலுகை மத்திய- மாநில அரசுகளால் வழங்கப்பட்டது.

தற்போது ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தவணை தொகையை திரும்ப செலுத்துபவர்களுக்கு மட்டுமே வட்டிச் சலுகை வழங்கப்படும் என்றும், எனவே பயிர்க்கடன் தவணை தொகையை ஆகஸ்ட் 31க்குள் வசூலிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை வற்புறுத்தியுள்ளது. கூட்டுறவு நிர்வாகமே இப்படி முன்னுக்குப்பின் முரணாக நடந்து கொள்வது வன்மையான கண்டனத்திற்குரியது. நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளது. ஊரடங்கு முற்றாக நீக்கப்படவில்லை. நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பாத நிலையில் விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விவசாயப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் கடன் தவணையை உடனே செலுத்த வேண்டுமென்பதும் இல்லையென்றால் வட்டிச் சலுகை கிடையாது என்று அறிவிப்பதும் குரூரமான நடவடிக்கை. எனவே, இந்த பிரச்னையில் தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு கடன் தவணை செலுத்துவதற்கான காலத்தை நீட்டிப்பதுடன், விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் வட்டிச்சலுகை கிடைப்பதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu Farmers Association , Interest concession, Tamil Nadu Farmers Association, condemnation
× RELATED உடுமலை அருகே ஒன்றிய அரசை கண்டித்து கருத்தரங்கு