×

மேலும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்து: கடுமையான உழைப்புக்கான பலனை வரும் தேர்தலில் ஸ்டாலின் பெறுவார்: கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கடுமையான உழைப்புக்கான பலனை வரும் தேர்தலில் பெறுவார் என்றும், அவர் மேலும் பல வெற்றிகளை குவிக்க கே.எஸ்.அழகிரி வாழ்த்தியுள்ளார். இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணா மறைவிற்குப் பிறகு தமது இறுதிக் காலம் வரை ஏறத்தாழ 50 ஆண்டுகள் திமுகவின் தலைமையை ஏற்று பல சோதனைகளை சந்தித்து சாதனை புரிந்தவர் கலைஞர். அவரது மறைவிற்குப் பிறகு கடந்த 2018 ஆகஸ்ட் 28 அன்று திமுக  தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மு.க.ஸ்டாலின். மிகப்பெரிய ஆளுமை கொண்ட கலைஞர் மறைவிற்குப் பிறகு திமுகவை கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுகளவு சேதாரமும் இல்லாமல் கட்டுக்கோப்பாக கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் இயக்கத்தை மிகச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். தேசிய அளவிலும், மாநில அளவிலும் அரசியலில் தமக்கென தனி முத்திரையை பதித்து வருகிறார். மத்தியில் நடைபெற்று வரும் வகுப்புவாத பாஜவையும், மாநிலத்தில் நடைபெற்று வரும் அதிமுகவின் அராஜக ஊழல் ஆட்சியையும் எதிர்த்துப் போராடி வருகிறார். அவர் திமுக  தலைவர் மட்டுமல்ல, தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவரும் கூட. அந்தப் பணியை நாள்தோறும் அரசியல் பேராண்மையோடு நிகழ்த்தி வருகிறார்.

தமிழகத்தில்  திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து வியூகம் வகுத்து செயல்படுத்தி வருகிறார். இவரது கடுமையான உழைப்பிற்கு உரிய பலனை 2021 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் பெறுகிற வாய்ப்பு கனிந்து வருகிறது. நீண்டகால அரசியல் பின்னணியுடன் கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறப்பான தலைமையை திமுகவுக்கு வழங்கி, 3ம் ஆண்டில் காலடி வைக்கும் மு.க.ஸ்டாலின் மேலும் பல வெற்றிகளை குவிக்க தமிழக காங்கிரஸ் சார்பில் மனதார வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Stalin ,elections ,KS Alagiri , Greetings, Stalin, KS Alagiri, Report
× RELATED பாஜ ஆட்சியின் முடிவுக்கான...