×

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வசந்தகுமார் எம்.பி. மரணம்: கன்னியாகுமரியில் இறுதிச் சடங்கு

சென்னை: கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் மூத்த தலைவருமான எச்.வசந்தகுமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நேற்றிரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70. அவரது உடல் கன்னியாகுமரியில் உள்ள அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் பாதிப்பு 6 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. உயிரிழப்புகளும் 100ஐ தாண்டுகிறது. இதில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார், தொகுதியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார். இதற்காக தனது தொகுதியிலே நீண்ட நாட்களாக தங்கியிருந்து இப்பணிகளை கவனித்து வந்தார். சென்னை திரும்பிய அவருக்கு சமீபத்தில் கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. அவரது மனைவி தமிழ்செல்விக்கும் அறிகுறிகள் இருந்ததால் இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10ம்தேதி அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வசந்தகுமாருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நலம் சீராக இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து இருந்தார். தொடர்ந்து, அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், வசந்தகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், வசந்தகுமாரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று மாலை மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதில், ‘‘வசந்தகுமாருக்கு நிமோனியா காய்ச்சலும், மூச்சு திணறலும் இருந்து வந்தது. அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென காய்ச்சல் அதிகரித்துள்ளது. இதனால் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது’’ என்று கூறப்பட்டிருந்தது. இதற்கிடையே, சிகிச்சை பலனின்று நேற்று மாலை 6.56 மணி அளவில் வசந்தகுமார் காலமானார். கடைசியாக வசந்தகுமாருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனையில் அவருக்கு கொரோனா, நெகட்டிவ் என பரிசோதனை முடிவு வந்தது. இதையடுத்து வசந்தகுமாரின் உடல் தி.நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு நேற்றிரவு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று பகல் 12 மணி அளவில் சத்தியமூர்த்தி பவனில் கட்சியினர் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
அப்போது, அகில இந்திய காங்கிரஸ் சார்பில், தேசிய செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக், நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அஞ்சலி செலுத்துகின்றனர். அதை தொடர்ந்து, வசந்தகுமாரின் உடல் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்துக்கு எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

வசந்தகுமார் மறைவையொட்டி, பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள், கலைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த வசந்தகுமாருக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும், தங்கமலர் என்ற மகளும், விஜய் வசந்த், வினோத்குமார் என இரண்டு மகன்களும் உள்ளனர். இவரது சகோதரர் குமரி அனந்தன். இலக்கியவாதி, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர். இவரது மகள் தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா கவர்னராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கை வரலாறு: கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் என்ற கிராமத்தில் 1950ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி வசந்தகுமார் பிறந்தார். விஜிபி நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றிய வசந்தகுமார், 1970ம் ஆண்டில், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையை தொடங்கினார். 1978ம் ஆண்டில் வசந்த் அன் கோ என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

இன்று அந்த நிறுவனம் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களில் 64 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பிரபல தொழிலதிபராக உயர்ந்த அவர், பின்னர் அரசியலிலும் முத்திரை பதித்தார். சகோதரர் குமரிஅனந்தன் அரசியலில் இருந்ததால் இளம் வயது முதலே அரசியலில் ஆர்வம் காட்டினார். காங்கிரஸ் கட்சியில் இணைந்து பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தார். பின்னர் அவர் காங்கிரசில் வர்த்தகர் பிரிவை தொடங்கி அதன் தலைவராக பணியாற்றி வந்தார். தற்போது அவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார்.

நீண்டகாலமாக அரசியலில் இருந்தாலும் 2006ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக பேரவைக்குள் நுழைந்தார். 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக எம்எல்ஏ ஆனார். அவருக்கு 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு கன்னியாகுமரி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்டு 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதுதவிர, ரசாயனம் மற்றும் உரத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராகவும், தகவல் மற்றும் நாடாளுமன்ற ஆலோசனை குழு உறுப்பினராகவும் இருந்தார். 2008ம் ஆண்டு வசந்த் டிவி எனும் தொலைக்காட்சியை தொடங்கினார். ‘வெற்றிகொடிகட்டு’ எனும் இவரது பிரபல சுயசரிதை புத்தகத்தை ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி இணைந்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி தொகுதியில் எம்பி பதவி ஏற்ற பின்பு பல்வேறு வளர்ச்சி பணிகளை வேகமாக செய்ய தொடங்கினார். குறிப்பாக சொந்தமாக ஜே.சி.பி. இயந்திரம் மூலம் குளங்கள், கால்வாய்களை தூர்வாரி கொடுத்தார். தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தினார். இதன் மூலம் பல இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்.கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தொகுதியின் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த வசந்தகுமார், தேசிய நெடுஞ்சாலைகள் சீரமைப்பு பணிக்காக சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினார். கொரோனா ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து கிராமப்புற மக்கள் மற்றும் மலையோர கிராமங்களில் உள்ளவர்களுக்கு நிவாரண பொருட்களை தொடர்ந்து வழங்கினார். தொடர்ந்து மக்கள் நலப்பணியில் இருந்தவர், கடந்த மாதம் சென்னை வந்த நிலையில், தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியான 2வது மக்கள் பிரதிநிதி வசந்தகுமார், தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்பட பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 4 எம்பிக்கள், 4 அமைச்சர்கள், 33 எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று முன்தினம் சீர்காழி சட்டப்பேரவை தொகுதி அதிமுக எம்எல்ஏ பாரதி, கீழ் வேளூர் தொகுதி திமுக எம்எல்ஏ மதிவாணன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஜூன் 10ம் தேதி அவர் இறந்தார். இந்த நிலையில் கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியாகும் 2வது மக்கள் பிரதிநிதி வசந்தகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டவர்

பிரதமர் மோடி டிவிட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘மக்களவை எம்பி வசந்த குமார் மறைந்தது வருத்தமளிக்கிறது. வணிகம், சமூக சேவையில் அவரது முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது. அவருடன் பேசும் போது, தமிழகத்தின் முன்னேற்றத்தின் மீதான ஆர்வத்தை எப்போதும் கண்டுள்ளேன். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!’ என கூறி, வசந்த குமாருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதயத்தில் நிலைத்து இருப்பவர்: ராகுல்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘கொரோனா பாதிப்பால் எம்பி வசந்தகுமார் காலமானது அதிர்ச்சி அளிக்கிறது. மக்கள் சேவையில் காங்கிரசின் சித்தாந்தங்களுக்காக அவர் செய்த அர்ப்பணிப்பு, நம் இதயத்தில் என்றும் நிலைத்திருக்கும். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,’ என கூறியுள்ளார்.

காங்கிரசுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: வசந்தகுமார் மறைவுக்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். சில தினங்களுக்கு முன்பு  மருத்துவமனையில் இருந்த அவரை தொலைபேசியில் அழைத்து உடல்நலம் விசாரித்தேன். விரைவில் வீடு திரும்புவார் என்று நம்பிக்கையுடன் நினைத்திருந்த வேளையில் கொரோனா என்ற கொடிய நோய் அவரை நம்மிடமிருந்து அநியாயமாகப் பிரித்துச் சென்று விட்டது அதிர்ச்சியளிக்கிறது. சென்ற மக்களவை தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று - மக்களோடு மக்களாக நின்று களப்பணியாற்றியவர். ‘வசந்த் அண்ட் கோ’ என்ற நிறுவனத்தை தனது கடின உழைப்பால் உருவாக்கிக் காட்டி முன்னுதாரணமாக விளங்கியவர். பொதுவாழ்விற்கு ஒரு இலக்கணமாகவும் எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்த அவரின் மறைவு, காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

உடன்பிறந்தோர் 8 பேர்

கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் கிராமத்தில் ஹரிகிருஷ்ண நாடார்- தங்கம்மை தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் எச்.வசந்தகுமார். இவரது மூத்த சகோதரர் இலக்கியவாதி குமரி அனந்தன். குமரி அனந்தன் உட்பட மொத்தம் 6 ஆண்களும், இரண்டு பெண்கள் என மொத்தம் 8 பேர் உடன்பிறந்தவர்கள். இதில் வசந்தகுமார் இரட்டை பிறவி. அவருடன் பிறந்த சகோதரிக்கு வசந்தகுமாரி என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Vasantha Kumar MP ,Vasanthakumar ,Death ,Funeral ,Corona ,Kanyakumari , Corona, Vasanthakumar MP , Death
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...