×

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் அனைத்து எம்பி.க்களுக்கும் கொரோனா பரிசோதனை: சபாநாயகர் பிர்லா அறிவிப்பு

புதுடெல்லி: ‘நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்கும் முன்பாக அனைத்து எம்பி.க்களும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,’ என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார். கொரோனா பாதிப்புக்கு மத்தியில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், அடுத்த மாதம் 14ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை நடத்தப்பட வாய்ப்புள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கவனித்து வருகிறார். இது தொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்), எய்ம்ஸ், மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, டெல்லி அரசு அதிகாரிகளுடன் சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘கூட்டத் தொடரில் பங்கேற்கும் அனைத்து எம்பி.க்களும், 72 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்ய கொள்ள வலியுறுத்தப்படுவார்கள். அதே போல், நாடாளுமன்றத்திற்கு வரக்கூடிய அதிகாரிகள், அமைச்சக பிரதிநிதிகள், ஊடக மற்றும் அவை செயலக அதிகாரிகள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அனைவரிடமும் தொடுதலற்ற பாதுகாப்பு பரிசோதனைகளும் செய்யப்படும்,’’ என்றார்.

கேள்வி நேரத்தை குறைக்க கூடாது
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவரான ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, மக்களவை சபாநாயகருக்கு 2 பக்க கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர், ‘கூட்டத்தொடரை சுமூகமாக நடத்தவும், அதே சமயம் எம்பிக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு சபாநாயகர் எடுத்து வரும் நடவடிக்கைளை மனதார பாராட்டுகிறோம். ஆனால், கொரோனாவை காரணம் காட்டி, கேள்வி நேரத்தையும் பூஜ்ய நேரத்தையும் குறைக்க பரிந்துரை இருப்பதாக அறிகிறோம். இது, தேச நலன் குறித்த விஷயங்களை எம்பிக்களை அவையில் எழுப்புவதை தடுக்கும் முயற்சியாகும். தற்போதைய கொரோனா பாதிப்பு காலகட்டத்தில், கேள்வி நேரத்தையும், பூஜ்ய நேரத்தையும் குறைப்பது எம்.பி.க்களின் நலனுக்கானதாக இருக்காது,’ என கூறியுள்ளார்.

Tags : Speaker ,Corona ,Birla ,Announcement ,spring session ,Parliamentary ,MPs ,Corona Test , Rainy Season Series, Corona Test, Speaker Birla, Announcement
× RELATED உதகையில் திரைப்பட நகரம் அமைப்பதோடு,...