×

நாடு முழுவதும் 6 ஆண்டுகளில் ஜன்தன் திட்டத்தில் 40 கோடி வங்கி கணக்கு: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் 40 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளதாக பிரதமர மோடி கூறியுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் செயல்படுத்திய முக்கிய திட்டங்களில் ஜன்தன் யோஜனா திட்டமும் ஒன்றாகும். மத்திய அரசு வழங்கும் சலுகைகள் மக்களுக்கு நேரடியாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கி கணக்குகளை தொடங்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2014ம் ஆண்டு ஆகஸ்டில் பிரதமர் மோடியால் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டம் தொடங்கி நேற்றுடன் 6 ஆண்டுகள் ஆகின்றன. இதை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,  ‘கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ஜன்தன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. இது ஒரு மாற்றத்திற்கான முயற்சியாக இருந்தது. வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு அடித்தளமாக இருந்தது. கோடிக்கணக்கான மக்கள் இந்த திட்டத்தின் மூலமாக வங்கி கணக்கை தொடங்கினார்கள். இந்த திட்டத்தின் மூலம் பல குடும்பங்களின் எதிர்காலம் பாதுகாப்பாகி உள்ளது,’ என கூறியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் இதுவரை நாடு முழுவதும் 40 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டி இருக்கிறார். இதில், 63% பேர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள். அவர்களில் 55% பேர் பெண்கள்.


Tags : Modi ,Jantan ,country , Jantan project, 40 crore, bank account, Prime Minister Modi, proud
× RELATED சொல்லிட்டாங்க…