×

பெங்களூருவில் அரசு அலுவலகங்களுக்காக 25 மாடிகள் கொண்ட இரட்டை கோபுரம்: வாடகையை மிச்சப்படுத்த திட்டம்

பெங்களூரு: பெங்களூருவில் வாடகை கட்டிடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்களை  ஒரே கட்டிடத்தில் கொண்டு வரும் நோக்கத்தில், 25 மாடிகள் கொண்ட இரட்டை கோபுரத்தை அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலகங்கள், வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. குறிப்பாக, தலைநகர் பெங்களூருவில் அரசு அலுவலகங்களுக்கு வாடகை கொடுப்பதால், அரசுக்கு அதிகளவில் செலவு ஏற்படுகிறது. காரணம், இங்கு வாடகை கட்டணம் மிகவும் அதிகம். இதனால், பெங்களூருவில் வாடகை கட்டிடத்தில் இயங்கும் அலுவலகங்கள் அனைத்தையும், ஒரு இடத்தில் அரசு கட்டிடத்துக்குள் கொண்டு வர புதிய திட்டத்தை வகுத்துள்ளது.

இது பற்றி இம்மாநில துணை முதல்வரும், பொதுப்பணி துறை அமைச்சருமான கோவிந்த்  எம்.கார்ஜோள் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பெங்களூரு மாநகரில் பல அரசு  அலுவலகங்கள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகிறது. இட நெருக்கடி காரணமாக  ஆங்காங்கே அரசு அலுவலகங்கள் சிதறி இருப்பதால், பல்வேறு தேவைகளுக்காக வரும்  பொதுமக்கள் அலுவலகங்களை கண்டுபிடிக்க பெரிதும் சிரமப்படுகிறார்கள். மேலும், வாடகைக்காக அரசுக்கு அதிகளவில் செல்வாகிறது. இதை  தவிர்க்க  அரசு அலுவலகங்களை ஒரே கட்டிடத்தில் கீழ் கொண்டுவர அரசு முடிவு  செய்துள்ளது. இதற்காக ஆனந்தராவ் சர்க்கிளில் 25 மாடிகள் கொண்ட, இரட்டை கோபுரம் (டிவின் டவர்) கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை கட்டுவது தொடர்பான அறிவிப்பு 2020-21ம்  நிதியாண்டு பட்ஜெட்டில் ஏற்கனவே இடம் பெற்றுள்ளது. எனவே, இதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில்  பிரச்னை இருக்காது,’’ என்றார்.

Tags : Bangalore ,Government Offices ,Twin Towers ,floors , Bangalore, 25 floors, twin tower, project
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...