×

அதிமுக தலைமையில் தான் கூட்டணி: பாஜவுக்கு முதல்வர் எடப்பாடி பதிலடி

தஞ்சை: பாஜக தலைமையில் கூட்டணி என்று கூறி அக்கட்சியினர் கூறியநிலையில், ‘‘அதிமுக தலைமையிலான கூட்டணியே தேர்தலை சந்திக்கும்’’ முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக பதில் அளித்துள்ளார். திருவாரூர் மாவட்ட கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. உணவுத்துறை அமைச்சர் காமராஜ் முன்னிலை வகித்தார். இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார். ஆய்வு கூட்டத்துக்கு பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது: டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் கிணறு அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி துத்தநாகம், இரும்பு, செம்பு, அலுமினியம் போன்ற உருக்காலைகள் அமைப்பதற்கும், தோல் பதனிடும் தொழிற்சாலை உட்பட மொத்தம் 8 தொழில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் காவிரி உபவடிநில பகுதியில் உள்ள பாசன அமைப்புகளை விரிவுபடுத்துதல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டம் ரூ.3 ஆயிரத்து 384 கோடி மதிப்பில் பரிசீலனையில் உள்ளது.

தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி என்று அக்கட்சி தலைவர்கள் பேசி வருகிறார்கள். தேர்தலுக்கு இன்னும் 7 மாத காலம் இருக்கும் நிலையில் அதற்குள் கூட்டணிக்கு யார் தலைமை என்பதை பாஜகதான் முடிவு செய்யும் என்ற முரளிதர்ராவின் கருத்துக்கு பதில் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு முதல்வர் கூறினார். அதிமுக தலைமையில் கூட்டணி:  இதைத்தொடர்ந்து, தஞ்சையிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நிருபர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ‘‘இதுவரை நடந்த தேர்தல்களில் அதிமுக தலைமையிலான கூட்டணியே இருந்துள்ளது. எனவே வரக்கூடிய தேர்தல்களிலும் அதிமுக தலைமையிலான கூட்டணியே தேர்தலை சந்திக்கும். இது தொடரும்’’ என்று திட்டவட்டமாக கூறினார்.

தலைமை சர்ச்சை
தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. ஆனால், அதிமுக கூட்டணிக்குள் பல்வேறு கருத்துமோதல் எழுந்துள்ளது. ஏற்கனவே, பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி பேட்டி அளிக்கையில், ‘‘வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கும் பாஜகவுக்கும் இடையேதான் போட்டி. பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும்’’ என்று கூறி பரபரப்பை உண்டாக்கினார். இந்நிலையில் பாஜவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Edappadi ,alliance ,AIADMK ,BJP ,Coalition , AIADMK, Coalition, BJP, Chief Minister Edappadi, retaliation
× RELATED நான் செல்லும் இடங்களில் எல்லாம்...