×

வசந்தகுமார் எம்.பி. மறைவு: கவர்னர்கள், முதல்வர், தலைவர்கள் இரங்கல்

சென்னை: வசந்தகுமார் எம்.பி மறைவுக்கு கவர்னர்கள், முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்: கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். சிறந்த தொழிலதிபராகவும், அரசியல்வாதியாகவும் தன்னை நிரூபித்து வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களுக்கு சேவை செய்துள்ளார். அவரது இழப்பு தமிழக மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பு. தமிழிசை சவுந்தரராஜன்(தெலங்கானா கவர்னர்): சிறுவயதில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டது, சண்டையிட்டது எல்லாம் நினைவிற்கு வருகிறது. இயக்கம் வேறாக இருந்தாலும் ரத்தப்பாசம் இருவரிடமும் உண்டு. தூரத்தில் இருந்தே தங்களின் சுறுசுறுப்பையும், துருதுருப்பையும் கண்டு வியந்திருக்கிறேன். ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்.

முதல்வர் எடப்பாடி பழனி சாமி: காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமான செய்தி அறிந்து மிகுந்த  வேதனை அடைந்தேன். பல ஆண்டுகளாக பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, மக்களின் அன்பைப் பெற்றவர். வசந்தகுமார் மறைவு காங்கிரஸ் கட்சியினருக்கும், தொகுதி மக்களுக்கும் பேரிழப்பாகும். ஓ.பன்னீர்செல்வம் (துணை முதல்வர்): வசந்தகுமார் உயிரிழந்தார் என்ற துயரச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கும், கன்னியாகுமரி மக்களுக்கும் அவர் சார்ந்த இயக்கத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல். கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): வசந்த குமார் காலமான செய்தி கேட்டு கடும் அதிர்ச்சிக்கும், துயரத்திற்கும் ஆளாகியிருக்கிறேன். தமிழக காங்கிரசின் அப்பழுக்கற்ற முன்னணி தலைவர்களில் ஒருவரான வசந்தகுமார் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழக காங்கிரஸ் ஒரு வாரம் துக்கம் கடைபிடிப்பதோடு, கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துசெய்யப்படும். ராமதாஸ் (பாமக நிறுவனர்):  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வசந்தகுமார், சட்டப்பேரவை உறுப்பினராகவும்,  மக்களவை உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ (மதிமுக பொது செயலாளர்): வசந்தகுமார் மறைந்துவிட்டார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. உழைப்பால் உயர்ந்த வசந்தகுமார், உறுதியான காங்கிரஸ் தலைவர். தன்னால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு உதவியவர். இவரது மறைவு கட்சிக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் இழப்பாகும். விஜயகாந்த்(தேமுதிக தலைவர்): காங்கிரஸ் கட்சியின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான வசந்தகுமார் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): வசந்தகுமார் கடின உழைப்பாளி. எல்லோருடனும் அன்போடு பழக்கூடியவர், பலர் வாழ்வில் முன்னேர உதவிக்கரம் நீட்டியவர், உழைப்பால் உயர்ந்தவர் என்ற சொல்லுக்கு உகந்தவர். அவரது மறைவு தமிழக காங்கிரசுக்கும், அவர் சார்ந்திருக்கும் தொகுதிக்கும் மிகப் பெரிய இழப்பு.

இதுபோல, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர், இந்திய  கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, சமக தலைவர் சரத்குமார், எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, கவிஞர் வைரமுத்து, இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர், சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன், கோகுல மக்கள் கட்சி மாநில தலைவர் எம்.வி.சேகர், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Tags : Vasanthakumar ,Death ,Leaders ,Chief Ministers ,Governors ,Vasanthakumar MP , Vasanthakumar MP , Funeral, leaders, mourning
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...