×

உடல் நலக்குறைவால் அவதி: ஜப்பான் பிரதமர் அபே ராஜினாமா

டோக்கியோ: ஜப்பான் பிரதமராக ஷின்சோ அபே. இவரது கடந்த பதவிககாலம் வரும் 2021ம் ஆண்டு செப்டம்பருடன் முடிகிறது. இவர், கடந்த 2006ம் ஆண்டு ஜப்பானின் மிக இளம் வயது பிரதமராக பொறுப்பேற்றார். உடல் நிலை காரணமாக தனது பிரதமர் பதவியை 2007ம் ஆண்டு ராஜினாமா செய்தார். கடந்த 2012ல் 2வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். விடுதலை ஜனநாயக கட்சியின் தலைவரான இவர், ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றவர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அபேவின் உடல்நிலை சரியில்லை என்பது குறித்து செய்திகள் வெளியாகி வந்தன. அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் இருப்பதால் பதவியில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அபே நேற்று கூறுகையில், ‘‘இளம் வயதில் இருந்தே பெருங்குடல் அழற்சி நோய் இருந்தது. ஜூனில் இருந்து இந்த நோயால் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர். இதற்கு மருந்து எடுத்துக் கொள்கிறேன். இந்த நோயின் தாக்கத்தில் இருந்து நான் இன்னும் குணமாகவில்லை என அறிந்து கொண்டேன். எனது உடல் நல பாதிப்பு, அலுவல்களை பாதித்து விடக் கூடாது என்பதால் எனது பணியை ராஜினாமா செய்து இருக்கிறேன்,” என்றார். இதைத் தொடர்ந்து, அபேவின் ராஜினாமாவுக்கு பிறகு பிரதமர் பதவியை ஏற்கப் போவது யார் என்பது குறித்த யூகங்கள், ஜப்பானில் அதிகமாகி இருக்கின்றன.


Tags : Abe ,Japanese , Japan, Prime Minister Abe, resigns
× RELATED ராஜமவுலிக்கு பரிசு கொடுத்த 83 வயது ஜப்பான் பாட்டி